4 பிராந்தியங்களிலும் சம வளர்ச்சி என்பதுதான் அரசின் இலக்கு: புதுச்சேரி  முதல்வர் நாராயணசாமி

பிராந்தியங்களிலும் சம வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்பதே அரசின் இலக்கு என, முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

பிராந்தியங்களிலும் சம வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்பதே அரசின் இலக்கு என, முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பல்வேறு கட்சி உறுப்பினர்கள் விவாதத்தைத் தொடர்ந்து நாராயணசாமி பதிலளித்துப் பேசியதாவது:
ஆளுநர் உரை என்பது கடந்த ஆண்டில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், அரசின் செயல்பாடுகளைக் குறிப்பிட்டும், வரும் காலங்களில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களைக் கோடிட்டுக் காட்டுவதுதான்.
ஆளுநரின் உரையில் அரசின் எல்லாத் திட்டங்களையும் குறிப்பிட முடியாது. பட்ஜெட் துறை வாரியான விவாதங்கள் நடைபெறும் போது, திட்டங்களுக்கான முறையான பதில்கள் அளிக்கப்படும்.
புதுச்சேரி மாநிலத்தில் அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி ஏற்பட வேண்டும். நகர்ப்புறம் மட்டுமல்லாது, கிராமப்புறங்களில் வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்ற எண்ணத்தில் அரசு செயல்பட்டு வருகிறது.
தனிக் கணக்கு ஆரம்பிக்கும் முன் மத்திய அரசு 70 சதவீதம் மானியம், 30 மாநில அரசுகளின் வருவாயை எடுத்து திட்டங்கள் போடப்பட்டன. தற்போது தனிக் கணக்கு ஆரம்பித்த போது, 70 சதவீத மத்திய அரசின் மானியம், 30 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நெருக்கடி கொடுத்து தனிக் கணக்கு ஆரம்பித்தது.
அப்போது குறுக்கிட்ட அன்பழகன், தனிக் கணக்கை கொண்டு வந்தது மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசுதான். அதனை திசைத் திருப்பக் கூடாது என்றார்.
முதல்வர்: மத்திய அரசு கொண்டு வந்தாலும் அதனை ஏற்றுக் கொள்வதும், ஏற்காததும் மாநில அரசின் உரிமை. எங்களுடைய அரசின் மீது மத்திய அரசு பல நிர்பந்தங்களைக் கொடுத்தாலும் அதனை நாங்கள் ஏற்கவில்லை.
பிரதமர் தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட நான், புதுச்சேரி மாநிலத்தில் சட்டப்
பேரவை உள்ளது. எனவே, யூனியன் பிரதேசத்தில் சேர்க்கக் கூடாது. மத்திய நிதிக் குழுவில் சேர்க்க வேண்டும் என்றேன்.
காரணம், அப்போதுதான் மற்ற மாநிலங்களுக்குக் கிடைக்கக் கூடிய 42 சதவீத மானியம் கிடைக்கும்.
2007-ஆம் ஆண்டு புதுக் கணக்கு தொடங்கிய போது இருந்த கடன் ரூ. 3,400 கோடி தள்ளுபடி செய்ய வேண்டும். மற்ற மாநிலங்களுக்கு வழங்குவது போல, புதுச்சேரிக்கும் ஆண்டுதோறும் 10 முதல் 15 சதவீதம் வரை நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தினேன்.
புதுதில்லியை போல, புதுவை மாநிலத்துக்கு வருவாய் ஆதாரம் கிடையாது. 4 ஆயிரம் கோடி வரி மூலம் வருவாய் இருந்தாலும், மீதமுள்ள 3 ஆயிரம் கோடி மத்திய அரசின் மானியம் மற்றும் கடன் மூலம் பெறப்படுகிறது.
இந்த அரசானது ஏழை, எளிய மக்களுக்கு 20 கிலோ இலவச அரிசி, முதியோர் உதவித் தொகை உள்ளிட்டவற்றை வீடு தேடிச் சென்று அளிப்பது, சென்டாக் பணம் காலத்தோடு கொடுப்பது ஆகியவற்றை உரிய நேரத்தில் வழங்குவதில் முன்னுரிமை கொடுக்கிறது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மதுக் கடைகள் மூடல், நில விற்பனைக்குத் தடை, 7-ஆவது ஊதியக் குழு அமல்படுத்தல் உள்ளிட்டவற்றைச் செய்துள்ளோம்.
வறட்சி நிவாரணம் கேட்டதால், மத்திய நிபுணர் குழு புதுச்சேரி, காரைக்காலில் ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
நிதித் துறை அதனை பரிசீலனை செய்து நிதி கொடுக்கும் என நம்புகிறேன். கூட்டுறவுக் கடன்கள் ரத்து செய்ய கோப்புகள் ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆளுநர்  ஒரு சில கேள்விகளைக் கேட்டுள்ளார். அதற்குப் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு வங்கிகளில் உள்ள கடன்களைத் தள்ளுபடி செய்ய மாநில அரசுக்கு உரிமை உண்டு. ஆனால், தேசிய வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடன்களை ரத்து செய்ய மாநில அரசுக்கு உரிமை இல்லை. 20 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தி உள்ளோம்.  பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை 100 சதவீத விவசாயிகளுக்கு செயல்படுத்தி உள்ளோம். வரும் ஜூலை மாதம் முதல் விமான சேவை தொடங்கப்படும். புதுச்சேரியின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, வேலைவாய்ப்பை பெருக்குவது, சுற்றுலா வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜிஎஸ்டி சேவை வரி அமல்படுத்திய பிறகு நேரடியாக புதுச்சேரிக்கு வரி கிடைக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் வருமானத்தைப் பெருக்க முடியும். நிதி நிலைக்கு ஏற்ப அரசு திட்டங்களை நிறைவேற்றும் என்றார் முதல்வர் நாராயணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com