மருத்துவ மேற்படிப்பு கட்டண பிரச்னைக்கு 29-ஆம் தேதிக்குள் தீர்வு: அமைச்சர் மல்லாடி தகவல்

மருத்துவ மேற்படிப்புக்கான கல்விக் கட்டண பிரச்னைக்கு வருகிற 29-ஆம் தேதிக்குள் தீர்வு காணப்படும் என, சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி தெரிவித்தார்.

மருத்துவ மேற்படிப்புக்கான கல்விக் கட்டண பிரச்னைக்கு வருகிற 29-ஆம் தேதிக்குள் தீர்வு காணப்படும் என, சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி தெரிவித்தார்.
கல்விக் கட்டண பிரச்னை தொடர்பாக முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை தனியார் மருத்துவக் கல்லூரிகள் ஏற்க மறுத்தன. இதனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
புதுவையில் மருத்துவ மேற்படிப்புக்கான கலந்தாய்வு கடந்த 4, 11, 12, 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. இதில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ. 3 லட்சம் கல்விக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது.
இந்தக் கட்டணம் குறைவாக இருப்பதால், இதனை ஏற்க மறுத்து தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் இடைக் கால தடை பெற்றது.
இதையடுத்து, கடந்த 23-ஆம் தேதி கல்விக் கட்டண நிர்ணயக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
இதில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ. 5.50 லட்சம் கல்விக் கட்டணமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இதனையும் தனியார் கல்லூரி நிர்வாகம் ஏற்கவில்லை.
இந்த நிலையில், தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகிகளுடனான பேச்சுவார்த்தை முதல்வர் தலைமையில் பேரவை வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் முன்னிலை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், பாலன், சிவா, அன்பழகன், ஜெயபால், சுகுமாறன், கல்வித் துறை செயலர் நரேந்திர
குமார், சட்டத் துறைச் செயலர் செந்தில்குமார், சென்டாக் கன்வீனர் கோவிந்தராஜ் மற்றும் 3 தனியார் கல்லூரி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், கல்விக் கட்டணக் குழு நிர்ணயித்த கட்டணத்தை ஏற்று, மாணவர்களுக்கான இடங்களை உறுதி செய்யுமாறு அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இதனை ஏற்காத தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள், கல்விக் கட்டணத்தை ரூ. 25 லட்சத்துக்கு மேல் நிர்ணயிக்க வேண்டும் என்றன. எனவே, பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதுகுறித்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறியதாவது: கல்விக் கட்டணம் ரூ. 5.5 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. இதனை தனியார் மருத்துவக் கல்லூரிகள் ஏற்க மறுத்து நீதிமன்றத்தில் தடை பெற்றுள்ளது. நீதிமன்றத்துக்குச் சென்றால் உடனே பிரச்னைக்குத் தீர்வு காண முடியாது. எனவே, தனியார் கல்லூரி நிர்வாகிகளை அழைத்துப் பேசினோம். ஆனால், அவர்கள் ரூ. 30 லட்சம் முதல் ரூ. 33 லட்சம் வரை கல்விக் கட்டணம் எதிர்பார்க்கின்றனர்.
அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ. 5 லட்சம் வரை கல்விக் கட்டணத்தைக் குறைப்பதாகத் தெரிவித்தனர். தனியார் மருத்துவக் கல்லூரிகள் எதிர்பார்க்கும் கல்விக் கட்டணத்தை மாணவர்களால் செலுத்த முடியாது.
எனவே, மாணவர்கள் நலன் கருதி உயர்கல்விக் கட்டணக் குழுத் தலைவரிடம் பேசி 29-ஆம் தேதிக்குள் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com