ஊதியம் வழங்கப்படாததால் அரசு பல் மருத்துவக் கல்லூரி ஊழியர்கள், பேராசிரியர்கள் அவதி

புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவக் கல்லூரியில் ஊதியம் வழங்கப்படாததால் மருத்துவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவக் கல்லூரியில் ஊதியம் வழங்கப்படாததால் மருத்துவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
புதுவை மாநிலம் மருத்துவக் கேந்திரமாக விளங்கி வருகிறது. இங்கு ஜிப்மர், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரிகளும், மணக்குள விநாயகர், வெங்கடேஸ்வரா, ஆறுபடைவீடு, லட்சுமி நாராயணா, பிம்ஸ், மகாத்மா காந்தி, வினாயகா மிஷன் உள்ளிட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகள் என 9 மருத்துவக் கல்லூரிகளும், பல் மருத்துவத்தில் மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவக் கல்லூரி, தனியார் பல் மருத்துவக் கல்லூரி என 2 கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
கோரிமேட்டில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி 1990-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு பேராசிரியர்கள் மருத்துவர்கள் என மொத்தம் 35-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் 200-க்கும் மேற்பட்ட இதர அலுவலர்களும், ஊழியர்களும் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு பிடிஎஸ், எம்டிஎஸ் பாடப் பிரிவுகள் கற்பிக்கப்படுகின்றன. சுயேச்சையான நிர்வாகக் குழுவுக்கு ஆளுநர் தலைவராகவும், தலைமைச் செயலர் துணைத் தலைவராகவும் உள்ளனர். 40 பிடிஎஸ் இடங்கள் உள்ளன.
இங்கு பணியாற்றும் மருத்துவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்களுக்க கடந்த சில மாதங்களாக குறிப்பிட்ட தேதியில் ஊதியம் வழங்கப்படுவதில்லை. இது சம்பந்தமாக பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இருப்பினம், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கடந்த அக்டோபர் மாதமும் ஊதியம் 10-ஆம் தேதிக்கு மேல்தான் வழங்கப்பட்டது. இதற்கிடையே, இந்த மாதமும் சம்பளம் 10 -ஆம் தேதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை ஊதியம் வழங்கப்படவில்லை.
இதைக் கண்டித்து பல் மருத்துவக் கல்லூரி சங்கத்தினர் முறையிட்டும் பலனில்லை. எனவே, பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் சங்கத் தலைவர் சிவசண்முகம் கூறியதாவது:
இதுவரை ஊழியர்களுக்கு ஊதியம் தரவில்லை. இதுகுறித்து கேட்டால் நிதி நெருக்கடி எனக் கூறுகின்றனர். தன்னாட்சி பெற்ற கல்லூரியான இதற்கு அரசு போதிய நிதியை ஒதுக்க வேண்டும். இத்தனை நாள்கள் கடந்தும் ஊதியம் தரப்படாததால், ஊழியர்களின் குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். தலைமைச் செயலருக்கும் இதுதொடர்பாக மனு அளித்துள்ளோம். மாதந்தோறும் ஊதியத்தை சரியான நேரத்தில் வழங்க தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com