"குழந்தைகள் வன்கொடுமை வழக்குகளை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றம் வேண்டும்'

குழந்தைகள் மீதான வன்கொடுமை வழக்குகளை விசாரித்து விரைந்து முடிக்க, புதுச்சேரியில் சிறப்பு நீதிமன்றம் ஏற்படுத்த வேண்டும் என குழந்தை நலக் குழு தலைவர் வித்யா ராம்குமார் தெரிவித்தார்.

குழந்தைகள் மீதான வன்கொடுமை வழக்குகளை விசாரித்து விரைந்து முடிக்க, புதுச்சேரியில் சிறப்பு நீதிமன்றம் ஏற்படுத்த வேண்டும் என குழந்தை நலக் குழு தலைவர் வித்யா ராம்குமார் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
சைல்டு லைன் மூலம் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், அனைத்துக் குழந்தைகளுக்கும் 1098 என்ற எண் குறித்து நன்றாக தெரிந்துள்ளது. இந்த எண்ணில் தெரிவிக்கப்படும் புகார் குழந்தைகள் நலக் குழுவுக்கு வருகிறது.
அதன்பேரில், நாங்கள் நடவடிக்கை எடுக்க வழிசெய்கிறோம். குழந்தைகள் நலக் குழுவுக்கு சைல்டு லைன் மட்டுமன்றி சுகாதாரத் துறை, கல்வித் துறை, காவல் துறை மற்றும் ஜிப்மர் மருத்துவமனையும் நல்ல ஒத்துழைப்பு தருகின்றன.
குழந்தைகள் நலக் குழு மூலம் பெறப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் 187 குழந்தைகளை கொடுமையிலிருந்து  மீட்டுள்ளோம். 23 பேருக்கு மருத்துவ உதவி, 101 பேருக்கு ஆலோசனை வழங்கியதுடன் 357 பேரை ஐடிஐயிலும் சேர்த்துள்ளோம்.
சமூக நலத் துறையின் அனுமதியுடன் புதுவையில் 49 காப்பகங்கள் இயங்கி வருகின்றன. இதில் 3,547 குழந்தைகள் தங்கி பயின்று வருகின்றனர். 136 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. 174 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளனர்.
குழந்தைகள் நலக் குழு மூலம் அரசுப் பள்ளிகளில் விழிப்புணர்வு ஆலோசனைகளை வழங்கி வருகிறோம். கடந்த காலங்களில் மாணவர்கள் ஏராளமான புகார்களை தெரிவித்தனர். குறிப்பாக, ஆசிரியர்கள் மீது பல புகார்கள் வந்தன. அதன்பேரில் நடவடிக்கை எடுத்தோம்.
தற்போது எந்தப் புகாரையும் தெரிவிக்க வேண்டாம் என்ற மாணவர்களிடம் பள்ளி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதனால், அவர்கள் புகார்களை தெரிவிக்க தயங்குகின்றனர். இந்த பிரச்னையில் அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரியில் சிறப்பு நீதிமன்றம் இல்லாததால் குழந்தைகள் பிரச்னை தொடர்பான வழக்குகளை விசாரணைக்கு எடுத்து தீர்வு காண்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால், பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதுவரை 5 வழக்குகளுக்கு மட்டுமே தீர்வு காணப்பட்டுள்ளது.
இத்தகைய வழக்குகளை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றம் வேண்டும். இதற்கு புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் வித்யா ராம்குமார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com