துறை வாரியாக மனித வள தணிக்கை நடத்தப்பட வேண்டும்: ஆளுநர் உத்தரவு

புதுவை அரசுத் துறைகளில் துறை வாரியாக மனித வளம் குறித்த தணிக்கையை நடத்த வேண்டும் என தலைமைச் செயலருக்கு துணைநிலை  ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டார்.

புதுவை அரசுத் துறைகளில் துறை வாரியாக மனித வளம் குறித்த தணிக்கையை நடத்த வேண்டும் என தலைமைச் செயலருக்கு துணைநிலை  ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டார்.
பிஆர்டிசி நிறுவனத்தைச் சேர்ந்த ஓட்டுநர்கள், ஊழியர்கள், எம்.எல்.ஏ.க்களின் வாகனங்களுக்கு ஓட்டுநர்களாக பணிபுரிந்து வருகின்றனர். ஆனால், ஊதியத்தை மட்டும் பிஆர்டிசியில் பெறுகின்றனர் என புகார் வந்தததையடுத்து, இதுகுறித்து விசாரணை நடத்த ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டார்.
இந்த நிலையில், ஆளுநர் மாளிகையிலும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் 64 பேர் பணிபுரிந்து வருவதாக முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டினார்.
இதுதொடர்பாக, ஆளுநர் கிரண் பேடியின் திங்கள்கிழமை சுட்டுரைப் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது:
புதுவை மாநிலத்துக்கு மனிதவளம், பணியாளர் குறித்த சிறந்த கொள்கையை வகுக்க வேண்டும். ஊழியர்களை தேர்ந்தெடுக்க சுயேச்சையான தனி வாரியம் ஏற்படுத்த வேண்டும்.
வேலை நியமனத்தில் எந்த முறைகேடும் இல்லாமல், விதிகள், தகுதியின்படியும், தேவையின்படியும் அமைய வேண்டும். மேலும், ஒரு துறையில் இருந்து வேறு துறைக்கு ஊழியர்களை பணி அமர்த்தினால், அதனால் அந்தத் துறைக்கு இழப்பீடு தர வேண்டும்.
எவ்வளவு நாள்கள் மாற்றுப் பணிபுரிய வேண்டும், அதற்கான இழப்பீடு எவ்வளவு என்பதையும் முடிவு செய்ய வேண்டும். எனினும், அரசு ஊழியர்களை தனி நபர்களுக்கு பணிபுரிய அனுமதிக்க முடியாது. தேவையில்லாத பணியிட மாற்றத்தையும் ஏற்க முடியாது. புதிய தலைமைச் செயலாளர் ஒவ்வொரு துறை வாரியாக உள்ள மனிதவளம், தேவை, எவ்வாறு அவர்கள் தேர்வு செய்யப்பட்டனர், அவர்களது தற்போதைய தேவை, பணித்திறன் குறித்து தணிக்கை செய்ய வேண்டும்.
பயிற்சி தொடர்பான கொள்கையையும் ஏற்படுத்த வேண்டும். புதிய தலைமைச் செயலர் நேர்மை, கண்டிப்புக்கு பெயர் பெற்றவர் என்பதாலும், கண்காணிப்பு மேற்கொண்டு இவை அனைத்தும் முறையாக மேற்கொள்ளப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.
அரசு ஊழியர்கள் நியமனம், பயன்பாடு போன்றவற்றில் புதுச்சேரி நல்ல நிலையை அடையப் போகிறது. இதுதொடர்பாக இந்திய கணக்கு தணிக்கைத் துறை தலைவர் சிஏஜிக்கும் கடிதம் எழுதியுள்ளேன். இதனால், மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய சேவைகள் ஊழியர்களின்றி பாதிக்கும் நிலை ஏற்படாது என்று குறிப்பிட்டுள்ளார் கிரண் பேடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com