ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதால் 35% வர்த்தகம் சரிவு: வணிகர் சம்மேளனத் தலைவர் தகவல்

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு, நாடு முழுவதும் 35 சதவீத வர்த்தகம் சரிந்தது. தற்போது வரி விகிதம் மாற்றப்பட்டுள்ளதால் நிலைமை சீரடைந்து வருகிறது என

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு, நாடு முழுவதும் 35 சதவீத வர்த்தகம் சரிந்தது. தற்போது வரி விகிதம் மாற்றப்பட்டுள்ளதால் நிலைமை சீரடைந்து வருகிறது என அகில இந்திய வணிகர் சம்மேளனத் தலைவர் ஆர்.சி.பார்த்தியா தெரிவித்தார்.
 புதுச்சேரி வணிகர் சங்கப் பேரவை சார்பில் பணமதிப்பிழப்பு ஓராண்டு தாக்கம், மின்னணு பணப் பரிமாற்றம் அதன் தேவை, ஜிஎஸ்டி ஒரு முன்னேற்றம் என்ற தலைப்பில் கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 புதுச்சேரி வணிகர் சங்கப் பேரவை தலைவர் எம்.சிவசங்கர் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் எஸ்.பாலு வரவேற்றார். பண அட்டை, செல்லிடப்பேசி செயலி மூலம் மின்னணு பரிவர்த்தனை மேற்கொள்ளுதல், ஜிஎஸ்டி வரி விதிப்பால் ஏற்பட்ட பாதிப்புகள், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஓராண்டில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தேசிய பொதுச் செயலாளர் பிரவீன் கண்டேல்வால், துணைத் தலைவர்கள் ரவி அரோரா, ரோஹன் மிஸ்ரா ஆகியோர் விவரித்தனர்.
 கூட்டத்துக்குப் பிறகு, தேசிய தலைவர் பார்த்தியா செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடு முழுவதும் வணிகர்கள் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறைக்கு மாறி வருகின்றனர். மின்னணு பணப் பரிவர்த்தனைக்கு ஊக்கம் தரும் வகையிலும், வர்த்தகர்கள், நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் புதுச்சேரி, லக்னௌ, போபால், கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
 கடந்த 13-ஆம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 200 பொருள்களுக்கு 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக வரி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு நிலைகளில் பாதிக்கப்பட்டிருந்த வியாபாரம் மீண்டும் சீரடையும். சில பொருள்கள் வரிக்குறைப்பால் நுகர்வோருக்கு கணிசமான பலன் கிடைக்கும்.
 ரூ.1.5 கோடிக்கு கீழாக வணிகம் புரிவோர் ஜிஎஸ்டி வரம்புக்குள் சேர்க்கப்படவில்லை. இது வரவேற்கத்தக்க அம்சமாகும்.
 மேலும், ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு, நாடு முழுவதும் 35 சதவீத வர்த்தகம் சரிந்தது. தற்போது வரி விகிதம் மாற்றப்பட்டுள்ளதால் நிலைமை சீரடைந்து வருகிறது.
 வணிகர்கள் முன்னரே வரி செலுத்தும் (ரிவர்ஸ் சார்ஜ் மெக்கானிசம்) முறையை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும். மேலும் ஜிஎஸ்டி குறைதீர் பிரிவு முற்றிலும் சீரமைக்கப்பட வேண்டும். எவரிடம் புகார் செய்வது எனத் தெரியாத நிலை உள்ளது. ஸ்வைப் இயந்திரங்கள் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
 மேலும், மின்னணு பணப் பரிவர்த்தனை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த டிஜிட்டல் ரத யாத்திரை நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் பார்த்தியா.
 கருத்தரங்கை தொடக்கி வைத்து நிதித்துறைச் செயலாளர் கந்தவேலு பேசுகையில், புதுச்சேரியில் மொத்தம் உள்ள வணிகர்களில் 92 சதவீதம் பேர் ஜிஎஸ்டி முறைக்கு மாறிவிட்டனர். 1054 பதிவுகள் வணிக வரித்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டன. மின்னணு பணப் பரிவர்த்தனைக்கான சேவை வரியை கணிசமாக குறைக்கும் வழிவகைகளை ஆராய ஜிஎஸ்டி கவுன்சிலிடம் தெரிவித்துள்ளோம் என்றார் கந்தவேலு.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com