நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம்: புதுவை பேரவைத் தலைவர் விளக்கம்

நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமனம் தொடர்பாக மத்திய உள்துறை அனுப்பிய கடிதம் முறையான வகையில் இல்லாததால் நிராகரிக்கப்பட்டது என புதுவை சட்டப்பேரவைத் தலைவர் வி.வைத்திலிங்கம் தெரிவித்தார்.

நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமனம் தொடர்பாக மத்திய உள்துறை அனுப்பிய கடிதம் முறையான வகையில் இல்லாததால் நிராகரிக்கப்பட்டது என புதுவை சட்டப்பேரவைத் தலைவர் வி.வைத்திலிங்கம் தெரிவித்தார்.
 மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில், புதுவையில் பாஜகவைச் சேர்ந்த 3 பேருக்கு நியமன எம்.எல்.ஏ.க்களாக துணைநிலை ஆளுநர் கிரண் பேடி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இருப்பினும், இதைப் பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் தொடர்ந்து ஏற்க மறுத்து வந்தார்.
 இந்த நிலையில், தங்களை சட்டப்பேரவை உறுப்பினர்களாக அங்கீகரித்து தங்களுக்கு பேரவையில் இருக்கை ஒதுக்க வேண்டும் என 3 பேரும் வைத்திலிங்கத்திடம் மனு அளித்தனர். இதற்கு முறையான நபரிடம் இருந்து 3 நியமன உறுப்பினர்கள் தொடர்பான உத்தரவு வராததால், அவர்களை சட்டப்பேரவை உறுப்பினர்களாக அங்கீகரிக்க முடியாது என 3 பேருக்கும் வைத்திலிங்கம் தனித் தனியாகக் கடிதம் எழுதியிருந்தார்.
 இந்த நிலையில், முன்னாள் பிரதமர் நேரு பிறந்த நாளை முன்னிட்டு, புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்த வைத்திலிங்கம், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமனம் தொடர்பாக மத்திய உள்துறை அனுப்பிய கடிதம் உரிய வகையில் இல்லை என்பதால் ஏற்க முடியாது. மேலும், இதுதொடர்பாக புதுவை தலைமைச் செயலாளர் வெளியிட்ட அரசாணையும் உரிய வகையில் இல்லை. வாரியத் தலைவர்கள் நியமனத்துக்கு விதிமுறைகள் வேறு, நியமன எம்.எல்.ஏ.க்களை நியமிப்பதற்கான விதிகள் வேறு. இரண்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றார் அவர்.
 காங்கிரஸ் மாநிலத் தலைவர் நமச்சிவாயம் கூறியதாவது:நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் சரியான முடிவை எடுத்துள்ளார். வரும் 23-ஆம் தேதி சட்டப்பேரவை கூடும் போது, அவர்கள் உள்ளே நுழைய முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக பாஜக சார்பில் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டால் அதை காங்கிரஸ் கட்சி எதிர்கொள்ளும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com