டிச. 3 முதல் தமிழக நியாய விலைக் கடைகள் முன் ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகத்தில் 2000 நியாய விலைக் கடைகள் முன் வரும் டிச.3 முதல் 10-ஆம் தேதி வரை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகத்தில் 2000 நியாய விலைக் கடைகள் முன் வரும் டிச.3 முதல் 10-ஆம் தேதி வரை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தமிழ்நாடு - புதுச்சேரி பகுதியின் விரிவடைந்த மாநிலக்குழுக் கூட்டம் புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாநிலத் தலைவர் கே.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். அகில இந்திய பொதுச் செயலாளர் ஹன்னன்முல்லா, மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம், மாநில பொருளாளர் கே.பி.
பெருமாள் உள்பட மாநிலம் முழுவதிலும் இருந்து 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: நவம்பர் 30-ஆம் தேதிக்குள் இந்த ஆண்டு பயிர்க் காப்பீட்டுக்கான பிரீமியம் செலுத்த வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது சரியில்லை. அனைத்துப் பயிர்களுக்கும் பிரீமியம் செலுத்துவதற்கான காலத்தை டிசம்பர் 15 வரை நீட்டித்து அரசு உத்தரவிட வேண்டும்.
தமிழக அரசு பயிர்க் காப்பீட்டு பிரச்னையில் தலையிட்டு, 2016-17-ஆம் ஆண்டுக்கு பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கப்படாத விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு விலையை நிர்ணயிக்க வருவாய் பங்கீட்டு முறையை அமல்படுத்தக் கூடாது:
2017-18ஆம் ஆண்டுக்கு தமிழக அரசு இதுவரை பரிந்துரை விலையை அறிவிக்கவில்லை. ரங்கராஜன் குழு பரிந்துரை அடிப்படையில் வருவாய் பங்கீட்டு முறையை அமல்படுத்த மாநில அரசு பரிசீலித்து வருகிறது. இந்த முறையை தமிழக அரசு அமல்படுத்தக்கூடாது.
பொது விநியோக முறை சீர்குலைப்பு: தமிழகத்தில் நியாய விலைக் கடைகளில் சர்க்கரையின் விலை திடீரென ரூ.25 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், உளுத்தம் பருப்பு இனி வழங்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது விநியோக முறை சீர்குலைக்கப்பட்டால் பல லட்சம் ஏழைக் குடும்பங்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிடும். இதை வலியுறுத்தி வரும் டிசம்பர் 3 முதல் 10-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள 2000 நியாய விலைக் கடைகள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார் சண்முகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com