அனைத்து சமுதாய மக்களுக்கும் பாலியஸ்டர் வகை துணிகள் வழங்க நடவடிக்கை: அமைச்சர் கந்தசாமி

அனைத்து சமுதாய மக்களுக்கும் பாலியஸ்டர் துணி வகைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமூக நலத் துறை அமைச்சர் மு.கந்தசாமி தெரிவித்தார்.

அனைத்து சமுதாய மக்களுக்கும் பாலியஸ்டர் துணி வகைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமூக நலத் துறை அமைச்சர் மு.கந்தசாமி தெரிவித்தார்.
 புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் அட்டவணை இணைத்தவருக்கான துணைத் திட்ட ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
 கூட்டத்துக்கு அமைச்சர் மு.கந்தசாமி தலைமை வகித்தார். அரசுச் செயலர் மிகிர் வரதன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் வல்லவன், ஆதிதிராவிடர் நலத் துறை இயக்குநர் ரகுநாதன், சுகாதாரத் துறை இயக்குநர் ராமன், பாட்கோ மேலாண் இயக்குநர் கதிர்வேல், சமூக நலத் துறை இயக்குநர் சாரங்கபாணி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
 கூட்டத்தில் நடப்பாண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்ட நிதியில் இருந்து செப்டம்பர் மாதம் (2017) வரை செய்யப்பட்ட செலவுகள் குறித்து அமைச்சர் கந்தசாமி ஆய்வு செய்தார்.
 கூட்டத்துக்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆதிதிராவிட மக்களுக்காக ஒதுக்கீடு செய்யும் திட்ட நிதி அந்த மக்களின் தேவையறிந்து செலவு செய்யப்பட வேண்டும். அட்டவணை இனத்தவருக்கான துணைத் திட்டத்துக்காக ஒதுக்கீடு செய்த நிதியை வேறு பொதுத் திட்டங்களுக்குச் செலவு செய்யக் கூடாது.
 நிகழாண்டு அட்டவணை இனத்தவருக்கான துணை திட்டத்தின் கீழ், 285.81 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் ரூ. 76.53 கோடி கடந்த செப்டம்பர் மாதம் வரை 21 துறைகள் மூலம் செலவு செய்துள்ளனர். இது 26.78 சதவீதமாகும். கடந்தாண்டு இதே கால கட்டத்தில் துணைத் திட்டம் 46.15 சதவீதத்தை அடைந்திருந்தது. ஆனால், நிகழாண்டு பாதி அளவாக 26.78 சதவீதத்தை மட்டுமே அடைந்துள்ளது.
 எனவே, அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு நூறு சதவீதத்தை எட்ட வேண்டும்.
 ஆதிதிராவிடர்களுக்கு 16 சதவீத நிதியை ஒதுக்கினால், மற்ற சமுதாய மக்கள் வருத்தப்படுகிறார்கள், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு துணிகளை வழங்கும் போது 18 வயது முதல் வழங்குகிறோம். பிற சமுதாயத்திலும் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்குத் துணிகள் வழங்கப்படுகின்றன.
 லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக துணிகள் வர தாமதம் ஏற்பட்டுள்ளது. அனைத்துச் சமுதாய மக்களுக்கும் பாலியஸ்டர் துணிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 பண்டிகை வரும் முன்பே வேட்டி, சேலைகள் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினேன். ஆனால், அவர்களின் மெத்தனப் போக்கால், தற்போது உரிய காலத்தில் தரமுடியவில்லை. விரைவில் வேட்டி, சேலைகள் வழங்கப்படும்.
 மேலும், கூட்டுறவு பணிகளில் பதவி உயர்வுக் கோப்பு, இலவச அரிசி வழங்கும் கோப்பு, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கல்வி, விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோப்புகளுக்கு அனுமதியளித்து, கையொப்பம் இட்டால் ஆளுநர் கிரண் பேடியைச் சந்தித்து நன்றி கூற தயாராக உள்ளேன் என்றார் அமைச்சர்
 மு.கந்தசாமி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com