விதிகளை மீறி மாணவர்கள் சேர்க்கை: நடவடிக்கை எடுக்க அதிமுக வலியுறுத்தல்

விதிகளை மீறி சேர்க்கை நடைபெற்ற விவகாரத்தில் மாணவர்களை வெளியேற்றாமல் தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள்

விதிகளை மீறி சேர்க்கை நடைபெற்ற விவகாரத்தில் மாணவர்களை வெளியேற்றாமல் தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள் மீது எம்சிஐ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டப்பேரவைக் குழு அதிமுக தலைவர் ஆ.அன்பழகன் தெரிவித்தார்.
 இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் பல்வேறு முறைகேடுகளும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் அறிவிப்புகளையும் மீறி புதுவையில் இயங்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
 சட்ட விரோதமாகவும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கு நேர்மாறாகவும் புதுச்சேரியில் உள்ள 7 தனியார் மருத்துவக் கல்லூரிகள் ஆளும் அரசின் துணையோடு தவறுகளை இழைத்தும், மாணவர்களிடம் இருந்து அதிக கட்டணம், நன்கொடை என்ற பெயரில் 50 லட்சத்துக்கும் மேலாகவும் வசூலித்து வருகின்றன.
 இதற்கு ஆளும் காங்கிரஸ் அரசும் துணை போகிறது என்று அதிமுக குற்றஞ்சாட்டி வந்தது. நிகழாண்டு மருத்துவ கவுன்சில் உத்தரவை மீறி நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட 767 மாணவர்களை வெளியேற்ற வேண்டும் என மருத்துவ கவுன்சில் ஆளுநர், சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
 இதுதொடர்பாக நிர்வாக ஒதுக்கீட்டுக்கும், அரசுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இதற்கு அரசு பொறுப்பேற்காது. நிர்வாகம்தான் பொறுப்பேற்க வேண்டும் என முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். முதல்வரின் பதில் பொறுப்பற்ற முறையில் உள்ளது.
 மருத்துவ கவுன்சில் 767 மாணவர்களை வெளியேற்றுமாறு கூறியது தவறான ஒன்றாகும். சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மீது மருத்துவ கவுன்சில் உரிய விசாரணை நடத்த வேண்டும். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
 இது இந்திய அளவில் புதுச்சேரி மாநிலத்துக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி அரசு இதற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசும், ஆளுநரும் இணைந்து மருத்துவ கவுன்சில் கவனத்துக்கு உண்மை நிலையை எடுத்துக் கூறி மாணவர்களுக்குப் பாதிப்பு இல்லாத வகையில் செயல்பட வேண்டும்.
 ஆண்டுதோறும் மருத்துவ கல்லூரியைக் கண்காணிப்பதில் கூட அரசுக்கு நேரமில்லையா, மருத்துவக் கல்லூரி உரிமையாளர்களின் சட்ட விரோத கொள்ளைக்கு புதுவை அரசு துணை போகாமல் இருந்து, நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 மாணவர்களை வெளியேற்றாமல் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள் மீது இந்திய மருத்துவ கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களைக் காக்க அமைச்சரவையைக் கூட்டி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அன்பழகன்.
 பாதிக்கப்பட்ட மாணவர்கள் முதல்வரிடம் மனு
 கடந்த 2016 - 17 ஆம் கல்வி ஆண்டில் விதிகளை மீறி சேர்க்கப்பட்டதாக 770 மாணவர்களை விடுவிக்க எம்சிஐ உத்தரவிட்டதால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் வியாழக்கிழமை இரவு முதல்வர் நாராயணசாமியிடம் மனு அளித்தனர்.
 கடந்த 7-ஆம் தேதி எம்சிஐ வெளியிட்ட உத்தரவின்படி, சுயநிதி மருத்துவக் கல்லுôரியில் சேர்ந்த நீட் தகுதியுள்ள மாணவர்களை நீட் மதிப்பெண்கள் அடிப்படையில் சென்டாக் மூலமாக சேர்க்காததால் தகுதி நீக்கம் செய்துள்ளது. ஆகையால், புதுச்சேரி அரசின் மூலம் நியமிக்கப்பட்ட நிரந்தர சேர்க்கை கமிட்டியின் தலைவர் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சித்ரா வெங்கட்ராமன் நீட் மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயார் செய்து 99 மாணவர்களை தகுதியுள்ளவர்களாகப் பட்டியலிட்டு 29.9.2016 - இல் புதுச்சேரி அரசு சுகாதாரத் துறைக்குப் பரிந்துரை செய்ததன் அடிப்படையில் சேர்ந்த 21 பேரை தகுதி நீக்கம் செய்யக் கூடாது என அந்த மனுவில் கூறியுள்ளனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com