நீர் நிலைகள் தூர்வாரப்படுமா?: விவசாயிகள் எதிர்பார்ப்பு

புதுவையின் பெரிய ஏரியான பாகூர் ஏரி உள்ளிட்ட நீர் நிலைகள் தூர்வாரப்படுமா என விவசாயிகள் எதிர்நோக்கியுள்ளனர்.

புதுவையின் பெரிய ஏரியான பாகூர் ஏரி உள்ளிட்ட நீர் நிலைகள் தூர்வாரப்படுமா என விவசாயிகள் எதிர்நோக்கியுள்ளனர்.
புதுச்சேரியின் நெற்களஞ்சியம் என்றழைக்கப்படுவது பாகூர் பகுதியாகும். இங்குள்ள பாகூர் ஏரி பண்டைய சோழ மன்னர்கள் காலத்தில் வெட்டப்பட்டதாகும்.
புதுவையின் 2-ஆவது பெரிய ஏரியான இதில் 193.50 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். இதன் மூலம் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 4,300 ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெற்றுகின்றன.
இந்த ஏரி பல ஆண்டுகளாக தூர் வாரப்படாமல் உள்ளது. இதனால், கரைப் பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு, நீர் பிடிப்புப் பகுதிகள் தூர்ந்து போயுள்ளது. இதனால், முழு கொள்ளளவு இல்லாமல் பெயரளவில் மட்டுமே நீர் இருந்து வருகிறது.
ஆண்டுதோறும் பாதுகாப்பு கருதி, பல ஆயிரம் கன அடி நீர் உபரி நீராக வெளியேற்றப்படுகிறது. எனவே, ஏரியைத் தூர்வார வேண்டும் என ஏரிப் பாதுகாப்பு சங்கங்கள், பல்வேறு சமூக அமைப்புகள் ஏரியைத் தூர்வாரி பராமரிக்க வேண்டும் என அரசை வலியுறுத்தி வந்த நிலையில், ஆளுநர் கிரண் பேடி கடந்த ஆண்டு அங்கு ஆய்வு மேற்கொண்டு, ஏரியைப் பராமரிக்க உத்தரவிட்டார்.
அதன்படி, ரூ. 10 லட்சம் ஒதுக்கப்பட்டு ஏரி தூர் வாரப்பட்டது. ஆனால், பெரிய ஏரியான பாகூர் ஏரிக்கு இந்தத் தொகை போதுமானதாக இல்லை. எனவே, ஏரியும் சரிவர தூர்வாரப்படவில்லை.
ஏரியை முழுமையாகத் தூர் வாரினால் மட்டுமே நீர் முழுவதுமாக தேங்கி நிற்கும். மேலும், பாகூரைச் சுற்றிலும் உச்சிமேடு ஏரி, சித்தேரி உள்பட ஏராளமான நீராதாரங்கள் உள்ளன.
பாகூர் ஏரிக்கு தென்பெண்ணையாற்றில் இருந்து மழை காலங்களில் உபரி நீரைக் கொண்டு வரும் பல்வேறு நீர்வரத்து கால்வாய்கள், பங்காரு வாய்க்கால், கலங்கல் போன்றவையும் இதுவரை தூர்வாரப்படாமல் ஆகாயத் தாமரை, முள்புதர்கள் மண்டிக் கிடக்கின்றன.
மதகுகளும் பழுது பார்க்கப்படாத நிலையில் உள்ளன. இதனால், பாகூர் ஏரியில் ஒன்றிரண்டு மாதங்கள் மட்டுமே நீர் தேங்கி நிற்கும் நிலை உள்ளது.
இதுகுறித்து பாகூர் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் செயலர் ப.கலியமூர்த்தி கூறியதாவது: ஏரி உள்ளிட்ட நீராதாரங்கள் முறையாகப் பராமரிக்கப்படாததால் விவசாயத்துக்குத் தேவையான நீர் கிடைப்பதில்லை. மேலும், விவசாய நிலங்கள் முறையற்ற வகையில் வீட்டு மனைகளாக மாற்றப்படுகின்றன.
ஆக்கிரமிப்பாளர்களால் ஏரிகள், குளங்கள் காணாமல் போகும் நிலை உள்ளது.
இந்த நிலையில் நீராதாரங்களும் தூர்வாரப்படாமல் போவதால் விவசாயமும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏரிகள், குளங்களை ஆழப்படுத்தி மண்ணை விவசாயிகள் எடுத்துச் செல்லும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதேபோல, பாகூர் ஏரி உள்ளிட்ட புதுவை மாநிலத்தில் உள்ள ஏரிகளைத் தூர்வாரி மண்ணை விவசாயிகள் எடுத்துச் செல்ல புதுவை அரசு திட்டம் வகுக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com