பாலித்தீன் பயன்படுத்தினால் வழக்குப் பதிவு செய்யப்படும்: அமைச்சர் கந்தசாமி

புதுவையில் பாலித்தீன் பயன்பாட்டைத் தடுக்கும் விதத்தில் அதைப் பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிப்பதுடன், அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்படும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கந்தசாமி தெரிவித்தார்.

புதுவையில் பாலித்தீன் பயன்பாட்டைத் தடுக்கும் விதத்தில் அதைப் பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிப்பதுடன், அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்படும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கந்தசாமி தெரிவித்தார்.
 புதுவை மாநிலத்தில் 51 மைக்ரானுக்கு கீழ் உள்ள பாலித்தீன் பொருள்கள் பயன்படுத்துவதற்கு அரசு தடை விதித்துள்ளது. ஆனால், தடையை மீறி பாலிதீன் பயன்படுத்துவதும், உற்பத்தி செய்வதும், விற்பனை செய்வதும் பரவலாக உள்ளது.
 இதைத் தடுக்கும் விதத்தில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கந்தசாமி, பாலித்தீன் பயன்படுத்துவதை தடுப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை புதன்கிழமை நடத்தினார். இதில், உள்ளாட்சித் துறை, சுற்றுச்சூழல் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 கூட்டத்துப் பிறகு, அமைச்சர் கந்தசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 புதுவையில் 51 மைக்ரானுக்கு கீழ் உள்ள பாலித்தீன் பொருள்கள் பயன்பாட்டை 6 மாதங்களுக்குள் தடை செய்ய உள்ளோம். இதை எவ்வாறு அமலுக்கு கொண்டு வரலாம் என்று ஆலோசிக்கப்பட்டது.
 வெளிநாடுகளில் பாலித்தீன் பைகளுக்குப் பதிலாக, எளிதில் மட்கக் கூடிய, ரசாயனப் பயன்பாடு இல்லாத, உடலுக்கு தீங்கு விளைவிக்காத பைகள் தயாரிக்கப்படுகின்றன. அதுபோன்ற பைகளை புதுச்சேரியில் தயாரிக்க சுய உதவிக் குழுவினருக்கு பயிற்சி கொடுப்பது, அந்தப் பொருள்களை உற்பத்தி செய்யும் இயந்திரங்களை வாங்கித் தர மானியம் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
 குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரித்து கொடுக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, உணவுப் பாதுகாப்பு சட்டத்தின்படி, காகிதம் அல்லது பாலிதீன் பைகளில் உணவு வகைகளை கட்டக்கூடாது.
 பாலித்தீன் பைகளில் சூடான உணவுப் பொருள்களை கட்டி எடுத்துச் சென்று சாப்பிடுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
 புற்றுநோய் வருவதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கும். எனவே, சாப்பிடும் உணவுப் பொருள்களை கட்டுவதற்கு பாலித்தீன் பைகளையோ, செய்தித்தாள்களையோ பயன்படுத்தக்கூடாது.
 இதற்காக, அனைத்து உணவகங்களிலும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
 புதுவையில் 51 மைக்ரானுக்கு கீழ் உள்ள பாலித்தீன் பொருள்களை தயார் செய்யும் தொழிற்சாலைகள் மூடப்படும். வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வருவதும் தடை செய்யப்படும்.
 பாலித்தீன் பைகளை சாலையில் வீசுவோர், விற்பனை செய்வோர், உற்பத்தி செய்பவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன், வழக்கும் பதிவு செய்யப்படும்.
 இதுகுறித்து வருகிற 27-ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் உள்பட அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்தில்
 இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார். பேட்டியின் போது, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், விஜயவேணி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com