மீண்டும் பணிக்கு வருகிறார் முன்னாள் ஆணையர் சந்திரசேகரன்

புதுவையில் அரசியல் காரணங்களால் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட முன்னாள் நகராட்சி ஆணையர் சந்திரசேகரனுக்கு மீண்டும் பணி வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து,

புதுவையில் அரசியல் காரணங்களால் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட முன்னாள் நகராட்சி ஆணையர் சந்திரசேகரனுக்கு மீண்டும் பணி வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, அவர் புதன்கிழமை தலைமைச் செயலரை சந்தித்தார்.
 புதுச்சேரி நகராட்சி ஆணையராக சந்திரசேகரன் பணியாற்றி வந்தார். புதுவை அரசுக்கும், துணைநிலை ஆளுநருக்கும் இடையே நடைபெற்ற மோதல் போக்கில், துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கு ஆதரவாக சந்திரசேகரன் செயல்பட்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து, அவரை அப்பதவியிலிருந்து நீக்கி, புதுவை சட்டப் பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் உத்தரவு பிறப்பித்தார்.
 இதனை மீறியும் சந்திரசேகரன், ஆணையர் பதவியில் தொடர்ந்தார். இது குறித்து, சட்டப் பேரவையில் உரிமை மீறல் பிரச்னை எழுப்பப்பட்டபோது, விசாரித்த சட்டப் பேரவைத் தலைவர் வைத்திலிங்கம், ஆணையர் சந்திரசேகரனை கடந்த மார்ச் 31-ஆம் தேதி கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைத்தார்.
 இதனை அடுத்து, சட்டப் பேரவைத் தலைவரின் முடிவு தவறானது என்றும், தனக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்றும், சென்னை உயர் நீதிமன்றத்தில் சந்திரசேகரன் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கின் விசாரணையின் போது, அரசு தரப்பில் மனுதாரருக்கு வேலை வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது.
 இதனை அடுத்து இந்த வழக்கை அக். 4-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்ததுடன், புதன்கிழமை தலைமை செயலரை சென்று சந்தித்து பணி உத்தரவு பெறும்படி, சந்திரசேகரனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
 இதையடுத்து, சந்திரசேகரன், புதன்கிழமை புதுவை தலைமைச் செயலகம் வந்தார். அவர், தலைமைச் செயலர் மனோஜ் பரிதாவை சந்தித்து உயர் நீதிமன்ற தீர்ப்பின் நகலை வழங்கினார். அப்போது தலைமைச் செயலர் இரு தினங்களுக்குள் பணி வழங்குவதாக உறுதியளித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com