சென்டாக் விவகாரம் : துணைநிலை ஆளுநர் மீது புதுவை முதல்வர் குற்றச்சாட்டு

சென்டாக் விவகாரத்தில் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி மீது புதுவை முதல்வர் வே.நாராயணசாமி குற்றச்சாட்டினார்.

சென்டாக் விவகாரத்தில் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி மீது புதுவை முதல்வர் வே.நாராயணசாமி குற்றச்சாட்டினார்.
புதுச்சேரியில் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உயர்கல்வி சேர்க்கையில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இதுதொடர்பாக துணைநிலை ஆளுநர் கிரண் பேடி சமூக வலைதளத்தில் கருத்து வெளியிட்டார். அதில், சென்டாக் விவகாரத்துக்கு முதல்வர், அமைச்சர் ஆகியோர் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், அவருக்குப் பதிலளிக்கும் விதமாக முதல்வர் வே.நாராயணசாமி சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சென்டாக் முறைகேடு விவகாரத்தில் அதிகாரிகள், தலைமைச் செயலர், முதல்வர், அமைச்சர் ஆகியோர் பொறுப்பேற்க வேண்டும் என துணைநிலை ஆளுநர் கிரண் பேடி கூறியுள்ளார்.
சென்டாக் மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக அரசு அனுப்பிய கோப்புகள் அனைத்திலும் ஆளுநர் கையொப்பம் இட்டுள்ளார். அவருக்கும்தான் இதில் பொறுப்பு உள்ளது.
சென்டாக் கலந்தாய்வு குறித்து சட்டப்பேரவையில் விவரமான அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளோம்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிகழாண்டு 50 சதவீத இடங்களைப் பெற்றோம். மத்திய சுகாதாரத் துறை, இந்திய மருத்துவ கவுன்சில் ஆகியவற்றின் விதிமுறைகளின்படி மனுக்கள் பெறப்பட்டு, தரவரிசை தயாரிக்கப்பட்டு கலந்தாய்வு நடத்தப்பட்டது.
இவற்றில், மாநில அரசின் இடங்கள் 162. நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள்158. மாநில அரசின் ஒதுக்கீட்டு இடங்கள் 162-இல் 114 இடங்கள் நிரப்பப்பட்டன. நிர்வாக ஒதுக்கீட்டில் 158-இல் 148 இடங்கள் நிரப்பப்பட்டன.
மாணவர்கள் சேர்க்கையில் சென்டாக் நிர்வாகம் அவர்களுக்கு கடிதம் வழங்குவதோடு சரி. கடிதம் பெற்ற மாணவர்கள் கல்லூரியில் சேர்க்கப்பட்டார்களா, இல்லையா என்பதைப் பார்க்க வேண்டிய கடமை இந்திய மருத்துவ கவுன்சிலுக்குத்தான் உள்ளது. கண்காணிக்கும் பொறுப்பு சென்டாக் நிர்வாகத்துக்கு இல்லை.
மேலும், சேர்க்கை தொடர்பான விதமுறைகளைக் கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி சித்ரா வெங்கட்ராமன் தலைமையிலும், கட்டணம் நிர்ணயத்துக்கு ராஜேஸ்வரன் தலைமையிலும் குழுக்கள் அமைக்கப்பட்டன.
இந்த நிலையில், ஆளுநர் கிரண் பேடி கலந்தாய்வு நடைபெற்ற இடத்துக்குச் சென்று மத்திய தொகுப்புக்குச் செல்ல வேண்டிய 26 இடங்களை மாநில மாணவர்களுக்குத் தர வேண்டும் என உத்தரவிட்டார். கலந்தாய்வு சரியான முறையில் நடைபெறவில்லை என்றால், அவர் அதுகுறித்து மாநில அரசின் கவனத்துக்கு கொண்டு வந்திருக்க வேண்டும்.
அவர் நேரிடையாகச் சென்றது மிகப் பெரிய தவறு. அங்கே அமர்ந்துகொண்டு கலந்தாய்வை நடத்தியது இரண்டாவது தவறு. விதிமுறைகளை மீறி 26 பேருக்கு சேர்க்கை வேண்டும் என உத்தரவிட்டது மூன்றாவது தவறு.
இந்த விவகாரத்தில் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி உச்ச நீதிமன்ற ஆணையையும், மத்திய சுகாதாரத் துறையின் உத்தரவையும் மீறியுள்ளார்.
சென்டாக் அதிகாரிகள் அனைவரும் மத்திய சுகாதாரத் துறை, இந்திய மருத்துவ கவுன்சில் ஆகியவற்றின் உத்தரவுப்படியே செயல்பட்டுள்ளனர். இது, சிபிஐ விசாரணையில் தெரிய வரும்.
ஆளுநர் கிரண் பேடி தவறான உத்தரவை வழங்கி சென்டாக் அதிகாரிகளைச் செயல்படவிடாமல் தடுத்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வரும்.
சென்டாக் விவகாரம் சிபிஐ விசராணையில் இருக்கும்போது ஆளுநர், சென்டாக் அதிகாரிகளை மிரட்டும் போக்கிலும், அரசுக்கு எதிராகக் கருத்து தெரிவித்து வருவதும் கண்டனத்துக்குரியது.
நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் பாஜகவின் முகவராகவே கிரண் பேடி செயல்பட்டார். இதுகுறித்து பிரதமர், அமைச்சர்களைச் சந்தித்து முறையிட்டும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆளுநர் மீது வழக்குப் பதிவு செய்வது குறித்து சட்ட ஆலோசகர்களுடன் கலந்தாலோசித்து வருகிறோம் என்றார் அவர்.
பேட்டியின் போது பொதுப் பணித் துறை அமைச்சர் ஏ.நமச்சிவாயம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் க.லட்சுமி நாராயணன், ஜெயமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com