புதுவையில் இலவச அரிசி கோப்புக்கு இன்று ஒப்புதல்: பொதுமக்கள் முன்னிலையில் ஆளுநர் அறிவிப்பு 

பொதுமக்களுக்கு இலவச அரிசி வழங்குவது தொடர்பான கோப்புக்கு திங்கள்கிழமை (ஏப்.16) ஒப்புதல் அளிக்கப்படும் என பொதுமக்கள் முன்னிலையில் புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி அறிவித்தார். 

பொதுமக்களுக்கு இலவச அரிசி வழங்குவது தொடர்பான கோப்புக்கு திங்கள்கிழமை (ஏப்.16) ஒப்புதல் அளிக்கப்படும் என பொதுமக்கள் முன்னிலையில் புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி அறிவித்தார்.
 புதுவை ஆளுநர் கிரண் பேடி வாரம்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கள ஆய்வு நடத்தி வருகிறார். தனது 152-ஆவது கள ஆய்வுப் பயணமாக கிருமாம்பாக்கம் ஏரிக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றார்.
 சமூக நலத் துறை அமைச்சர் மு.கந்தசாமியுடன் கடந்த வாரம் இந்த ஏரியில் கிரண் பேடி ஆய்வு செய்தார்.
 அப்போது, கிருமாம்பாக்கம் ஏரியை சுற்றுலாத் தலமாக மாற்ற நடவடிக்கை எடுத்தார். முதல்கட்டமாக ஏரிக் கரையை பலப்படுத்தி நடைபாதை அமைக்கப்பட்டது. மேலும், படகு குழாமுக்காக ஏரியின் மதகுப் பகுதியில் இரும்புப் பாலம் கட்டப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் சவாரி செய்ய 5 படகுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதையடுத்து, படகு குழாம் தொடக்க விழா ஆளுநரின் கள ஆய்வின்போது ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆளுநர் கிரண் பேடி படகு குழாமை தொடக்கி வைத்தார்.
 பின்னர், படகில் ஆளுநர் கிரண் பேடி, அமைச்சர் கந்தசாமி மற்றும் அதிகாரிகள் சவாரி செய்தனர். அதைத் தொடர்ந்து அங்கிருந்த அதிகாரிகளிடம், சுற்றுலாப் பயணிகளைக் கவர அடிப்படை வசதிகள் உள்பட கூடுதல் வசதிகளை செய்துதர வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிட்டார். இதற்கான பணிகளை வருகிற 19-ஆம் தேதிக்குள் முடிக்கவும் வலியுறுத்தினார்.
 அதைத் தொடர்ந்து, அங்கிருந்த பொதுமக்களுடன் ஆளுநர் கிரண் பேடி கலந்துரையாடினார். இலவச அரிசியை தொடர்ந்து வழங்க வேண்டும் என்று ஆளுநரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு ஆளுநர், பணமாக வழங்க வேண்டுமா? அல்லது அரிசியாக வழங்க வேண்டுமா? எனக் கேள்வி எழுப்பினார்.
 அதற்கு பொதுமக்கள் அரிசியையே தொடர்ந்து வழங்க வேண்டும். பணம் கொடுத்தால் 15 கிலோ அரிசி மட்டுமே வாங்க முடியும். எனவே, 20 கிலோ அரிசியை தொடர்ந்து வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர். இதை ஏற்றுக்கொண்ட ஆளுநர் இலவச அரிசிக் கோப்பில் திங்கள்கிழமை (ஏப்.16) கையெழுத்திட்டு ஒப்புதல் அளிப்பதாக உறுதி அளித்தார்.
 மேலும், ஏற்கெனவே அரசு நிறுவனங்களில் பணியாற்றி பணியை இழந்தவர்களுக்கு படகு குழாமில் பணி வழங்க வேண்டும் என்று ஆளுநரிடம் பொதுமக்கள் வலியுறுத்தினர்.
 அதற்கான நிதி அரசிடம் தற்போது இல்லை என ஆளுநர் பதில் அளித்ததுடன், இங்கு சிறு கடைகள், சிறுதொழில்கள் செய்ய மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கடன் வழங்கப்படும் என்றார்.
 ஆய்வின் போது, ஆளுநரின் கூடுதல் செயலர் ஜி.ஸ்ரீனிவாஸ், பொதுப் பணித் துறை முதன்மைப் பொறியாளர் சண்முகசுந்தரம், செயற்பொறியாளர் தாமரை புகழேந்தி, சுற்றுலாத் துறை இயக்குநர் முனிசாமி, பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சௌந்தரராஜன், துணை ஆட்சியர் பி.உதயக்குமார், வன அலுவலர் தியாகராஜன், நபார்டு திட்ட மாவட்ட வளர்ச்சி மேலாளர் உமா குருமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com