ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் நகை, பணம் திருட்டு 

புதுச்சேரியில் ஓய்வு பெற்ற தலைமைச் செயலக துணைச் செயலர் வீட்டில் நகை, பணம் திருடப்பட்டது குறித்து கோரிமேடு போலீஸார் விசாரித்து வருகின்றனர். 

புதுச்சேரியில் ஓய்வு பெற்ற தலைமைச் செயலக துணைச் செயலர் வீட்டில் நகை, பணம் திருடப்பட்டது குறித்து கோரிமேடு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 புதுச்சேரி கோரிமேடு லட்சுமி நகர் 3-ஆவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் நாகலிங்கம் (65). இவர், தலைமைச் செயலகத்தில் துணைச் செயலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி வாணி, சமூக நலத் துறையில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். இவர்கள் இருவரும் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர். இவர்களது வீட்டில் இரு பெண்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
 இந்த நிலையில், நாகலிங்கம் மனைவியுடன் கடந்த ஏப். 16-ஆம் தேதி பெங்களூருவில் உள்ள தனது மகனைப் பார்ப்பதற்காகச் சென்றார். வியாழக்கிழமை காலை வீட்டில் வேலை பார்க்கும் பெண் வாசலில் கோலம் போட வந்த போது, வீட்டின் கதவு திறந்திருப்பதைக் கண்டார். உடனடியாக அவர், நாகலிங்கத்துக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து நாகலிங்கம் அதே பகுதியில் உள்ள தனது அண்ணன் குப்புசாமியிடம் இதுகுறித்து தெரிவித்தார். அவர் நாகலிங்கத்தின் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, வீட்டில் கீழ்த்தளம், மாடியில் இருந்த அறைகளில் வைக்கப்பட்டிருந்த 4 பீரோக்கள் உடைக்கப்பட்டு, அதிலிருந்த பணம், நகைகள் திருடப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து கோரிமேடு காவல் நிலைய போலீஸாருக்கு குப்புசாமி தகவல் அளித்தார். அதன் பேரில், போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பீரோக்களில் பதிவான விரல் ரேகை தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
 இதுகுறித்த புகாரின் பேரில், கோரிமேடு காவல் ஆய்வாளர் கண்ணன், உதவி ஆய்வாளர் கலையரசன் ஆகியோர் தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறப்பு அதிரடிப்படை போலீஸார் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து அதில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். நாகலிங்கம் பெங்களூரில் இருந்து வந்த பின்னரே எவ்வளவு நகை, பணம் திருடப்பட்டது என்பது குறித்த முழு விவரம் தெரிய வரும் என போலீஸார் தெரிவித்தனர்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com