தனியாருக்கு சாதகமாக 7 அரசு மதுக் கடைகளின் உரிமம் ரத்து: விசாரணைக்கு உத்தரவிட பாசிக் ஊழியர்கள் கோரிக்கை 

புதுச்சேரி, காரைக்காலில் 7 பாசிக் மதுக் கடைகளின் உரிமம் திடீரென ரத்து செய்யப்பட்டது.

புதுச்சேரி, காரைக்காலில் 7 பாசிக் மதுக் கடைகளின் உரிமம் திடீரென ரத்து செய்யப்பட்டது. தனியாருக்கு சாதகமாக, அரசு மதுக் கடைகளின் உரிமத்தைப் புதுப்பிக்காமல் ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக புதுவை ஆளுநர் கிரண் பேடி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று பாசிக் ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.
 புதுவை மாநிலத்தில் கடந்த 1986-ஆம் ஆண்டு வேளாண் விளை பொருள்கள் வணிகக் கழகம் (பாசிக்) தொடங்கப்பட்டது. பாசிக் மூலம் விதைகள், இயற்கை மற்றும் வேதி உரங்கள், தோட்டக்கலை உரங்கள் உள்ளிட்ட வேளாண் சார்ந்த பொருள்கள் விற்பனை செய்யப்பட்ட வந்தன.
 இந்த நிறுவனத்தில் தற்போது 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். பாசிக் நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வந்ததால், அதை லாபத்தில் இயக்க ரங்கசாமி ஆட்சி காலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி மதுக் கடைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், உணவகங்கள் திறக்க முடிவு செய்யப்பட்டு, பாசிக் நிறுவனம் சார்பில் 15 மதுக் கடைகள் தொடங்கவும் உரிமம் வழங்கப்பட்டது.
 ஒவ்வொரு ஆண்டும் மதுக் கடை நடத்துவதற்கான உரிமத்தை பிப். 28-ஆம் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும்.
 கலால் துறைக்கு ரூ. 10 லட்சம் செலுத்தி உரிமத்தை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், மார்ச் 31-க்குள் ஒரு லட்சம் கூடுதலாக சேர்த்து ரூ. 11 லட்சமாகச் செலுத்தலாம். நிகழாண்டு மதுக் கடைகளின் உரிமத்தை பாசிக் நிறுவனம் புதுப்பிக்கவில்லை.
 மார்ச் மாதம் முடிந்தும் புதுப்பிக்கப்படாததால், மதுக் கடைக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
 எல்.ஆர்.பாளையம், கரையாம்புத்தூர், தட்டாஞ்சாவடி விவிபி நகர், மூலகுளம், சேதராப்பட்டு, காரைக்காலில் இரண்டு மதுக் கடைகள் என மொத்தம் 7 பாசிக் மதுக் கடைகளின் உரிமங்கள் ரத்தாகியுள்ளன.
 இன்றைய நிலவரப்படி கோடிக் கணக்கான வருவாய் உள்ள பாசிக் நிறுவனக் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது பாசிக் ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 இதுகுறித்து பாசிக் ஊழியர்கள் கூறியதாவது: பாசிக், பாப்ஸ்கோ, அமுதசுரபி, கான்பெட் உள்ளிட்ட அரசு சார்பு நிறுவனங்களை லாபகரமாக இயக்க மதுக் கடை உரிமம் வழங்கப்பட்டது. ஆட்சியாளர்களின் தவறான வழிகாட்டுதல்களால் இன்றைக்கு 7 மதுக் கடைகளின் உரிமம் ரத்தாகி உள்ளது.
 தனியார் நடத்த முடியாத பெட்ரோல் விற்பனை நிலையத்தை அரசே ஏற்று நடத்துகிற நேரத்தில் அரசுக்குக் கணிசமான லாபத்தைப் பெற்றுத் தரும் மதுக் கடைகளை தனியார் லாபம் பெறும் நோக்கில் உரிமத்தைப் புதுப்பிக்கவில்லை. அரசே இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உரிமம் புதுப்பிக்க முடியாத அளவுக்கு நிதி நெருக்கடி இருந்தால், தனியாருக்கு குத்தகை அடிப்படையில் உரிமத்தை கொடுத்திருக்க முடியும்.
 இதன் மூலம் பாசிக் நிறுவனத்துக்குக் குறைந்தது ரூ. 50 லட்சம் முன்வைப்புத் தொகையும் ஆண்டுக்கு ரூ. 1 லட்சத்து 20 ஆயிரமும் கிடைத்திருக்கும்.
 ஆனால், வேண்டுமென்றே பாசிக் மதுக் கடை அமைந்திருக்கும் பகுதியில் உள்ள தனியார் மதுக் கடைகள் லாபம் பெற வேண்டும் என்ற நோக்கில் ஒரு சிலருக்கு ஆதரவாக இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
 இந்த விஷயத்தில் என்ன நடந்தது என்பதை ஆளுநர் கிரண் பேடி நேரடியாகத் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும். தொடர்ந்து பாப்ஸ்கோ, அமுதசுரபி, கான்பெட் மதுக் கடைகளின் உரிமங்களைத் தனியாருக்கு ஆதரவாக புதுப்பிக்காமல் விட்டு விடுவார்களோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
 எனவே இதுதொடர்பாக ஆளுநர் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்றனர்.
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com