புதுவை மாநிலம் கல்வியில் முதலிடம்: முதல்வர் பெருமிதம் 

சிறிய மாநிலங்களை பொருத்தவரை புதுவை மாநிலம் கல்வியில் முதலிடத்தில் உள்ளது என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி பெருமிதத்துடன் கூறினார். 

சிறிய மாநிலங்களை பொருத்தவரை புதுவை மாநிலம் கல்வியில் முதலிடத்தில் உள்ளது என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி பெருமிதத்துடன் கூறினார்.
 புதுச்சேரி கதிர்காமம் இந்திரா காந்தி கலை - அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆண்டு விழா, விளையாட்டு விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி அவர் பேசியதாவது:
 படித்து பட்டம் பெற்று வேலைவாய்ப்பு பெறுவதுடன் இல்லாமல், விளையாட்டு, ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிப்பது போன்ற பிற துறைகளிலும் ஈடுபடுவது வாழ்க்கைக்கு உதவும். 17 சிறிய மாநிலங்களில் புதுவை மாநிலம்தான் கல்வியில் முதல் இடத்தில் உள்ளது.
 புதுச்சேரி அரசுப் பொறியியல் கல்லூரி நாட்டில் உள்ள கல்லூரிகளில் 100-ஆவது இடத்தில் உள்ளது. அதுபோல, தாகூர், இந்திரா காந்தி கலைக் கல்லூரிகள் 100 முதல் 150 இடங்களுக்குள் உள்ளன. ஆட்சிக்கு வந்தவுடன் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும் விதத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் நடத்தினோம். அதனால், தனியார் பள்ளிகளுடன் போட்டி போட்டுக் கொண்டு அரசுப் பள்ளிகள் தரம் உயர்ந்த நிலையில் செயல்பட்டு வருகின்றன.
 கல்லூரிகளுக்காக 2017-ஆம் ஆண்டில் ரூ. 20 கோடி நிதி ஒதுக்கினோம். அதில், ரூசா திட்டத்தின் கீழ் இந்திரா காந்தி கல்லூரிக்கு கட்டடம் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. தற்போது மத்திய அரசு ரூசா திட்டத்தில் கீழ், அளிக்கும் நிதியை மாற்றி அமைத்துவிட்டது. ஆனாலும், வரும் நிதிநிலை அறிக்கையில் இந்தக் கல்லூரி கட்டடத்துக்கு நிதி ஒதுக்கி கட்டுமானப் பணிகள் முடிக்கப்படும்.
 இந்தக் கல்லூரியில் உள்ள 5 பாடப் பிரிவுகளும் படித்தவுடன் வேலை வாய்ப்பு கிடைக்கக் கூடிய சிறந்த பாடப் பிரிவுகளாகும். புள்ளியியல் துறையில் அகில இந்திய அளவிலேயே அதிகாரிகள் கிடைப்பதில்லை. இந்தக் கல்லூரியில் எம்.காம்., பி.ஏ., பிரெஞ்ச் ஆகிய படிப்புகளைத் தொடங்க பல்கலைக்கழகத்திடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. புதுவை அரசு நிர்வாகம், சட்டம் - ஒழுங்கு, சுற்றுலா, கல்வி, மருத்துவம் ஆகியவற்றில் முதல் இடத்தில் உள்ளது. மத்திய அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய நிதி கிடைத்தால் மேலும் சிறப்பான வளர்ச்சி ஏற்படும்.
 முந்தைய அரசுகள் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தும் நிலையிலும் சிக்கனத்தைக் கடைப்பிடித்து, வருவாயை உயர்த்தியுள்ளோம். கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட ரூ. 7 ஆயிரம் கோடியில் ரூ. 6900 கோடி அதாவது 96 சதவீதத்தைச் செலவு செய்துள்ளோம்.
 அடுத்த ஆண்டு இந்தக் கல்லூரி தேசிய அளவில் 50 இடங்களுக்குள் வரவேண்டும். மாணவர்கள் கலைக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்து ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். படிப்பதுடன் சொந்த தொழில் செய்ய முயற்சி எடுக்க வேண்டும் என்றார் அவர்.
 தொடர்ந்து, கல்வித் துறை அமைச்சர் கமலக்கண்ணன் பேசியதாவது: கல்வியைச் சார்ந்த முன்னேற்றம் சரியாக இருக்க யோகா, தடகள விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் ஏதேனும் ஒன்றில் ஈடுபட வேண்டும்.
 உடல் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தால்தான், சிறந்த மூளையும், தெளிவான சிந்தனையும் இருக்கும். மாணவிகளுக்கு எதிர்கால வளத்தை உருவாக்கும் கடமையும் இருப்பதால் விளையாட்டில் சிறந்த கவனம் செலுத்த வேண்டும்.
 உடலை நன்றாக வைத்திருந்தால்தான் கல்வியும் சிறப்பாக வரும். தீய பழக்க வழக்கங்கள் வராது. விளையாட்டும், படிப்பும் அனைத்து வயதினருக்கும் பொருந்தும்.
 சிக்கனமாக இருந்து வணிக வரியை உயர்த்தியதால் ரூ. 200 கோடி வருவாய் உயர்ந்துள்ளது. கடந்த ஆட்சிகளில் பெற்ற ரூ. 6 ஆயிரம் கோடி கடனைத் திருப்பிச் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதால், புதுவை நிதிப் பற்றாக்குறை உள்ளது.
 நிகழாண்டு ரூ. 741 கோடி செலுத்த வேண்டிய தொகையில், 70 சதவீதம் செலுத்திவிட்டோம். ஆர்.பி.ஐ. விதிமுறைப்படி கடனைத் திருப்பிச் செலுத்த தவறினால், புதிய நிதியாதாரங்களை திரட்ட முடியாத சூழல் உருவாகும். அதனால்தான் கடனைத் திருப்பி செலுத்தி வருகிறோம். மத்திய அரசு 27 சதவீதம் மட்டுமே நிதி தருகிறது. இது வரும் ஆண்டுகளில் அதிகமாகும் என்று நம்புகிறோம்.
 கல்லூரியில் படிக்கும் காலங்களை மாணவர்கள் சரியாகப் பயன்படுத்தினால், அதன் பின்னர் வரும் 50 ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழலாம். கல்லூரிப் பேராசிரியர்கள் மாணவர்களை தங்களது பிள்ளைகளாகவும், உறவினர் பிள்ளைகளாகவும் பார்த்து நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
 முதலாம் ஆண்டு மாணவர்களிடம் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டால் ஒழுங்கீனம் ஏற்படாது. கல்லூரி, பள்ளிகளில் நடைபெறும் சமூக விரோதச் செயல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
 தொகுதி எம்.எல்.ஏ. என்.எஸ்.ஜெ.ஜெயபால் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி முதல்வர் குமரன் ஆண்டறிக்கை வாசித்தார். கூடுதல் செயலர் உள்ளிட்ட உயரதிகாரிகள், தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் யாசம் லட்சுமி நாராயண ரெட்டி, கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com