போலி ஏ.டி.எம். அட்டைகளை தயாரித்து பணம் திருட்டு: இருவர் கைது 

போலி ஏ.டி.எம். அட்டைகள் தயாரித்து தமிழகம், புதுவை, கர்நாடகம், கேரளம் ஆகிய 4 மாநிலங்களில் பணத்தை நூதன முறையில் திருடியதாக 2 பேரை சிபிசிஐடி போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

போலி ஏ.டி.எம். அட்டைகள் தயாரித்து தமிழகம், புதுவை, கர்நாடகம், கேரளம் ஆகிய 4 மாநிலங்களில் பணத்தை நூதன முறையில் திருடியதாக 2 பேரை சிபிசிஐடி போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ. 31 லட்சம், திருடப் பயன்படுத்தப்பட்ட பொருள்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
 புதுச்சேரியில் போலி ஏ.டி.எம். அட்டை மூலம் ஏ.டி.எம். மையங்களில் பணத்தைத் திருடும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இதுகுறித்து சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் ரஷீம் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் பழனிவேல், காவல் உதவி ஆய்வாளர் விஜயகுமார் ஆகியோர் தலைமையில் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
 இந்த நிலையில், புதுச்சேரி பிருந்தாவனம், சித்தன்குடி பிரதான சாலையில் உள்ள ஒரு கணினி மையத்தில் போலி ஏ.டி.எம். அட்டைகளை தயார் செய்து வருவதாக சிபிசிஐடி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளர் விஜயகுமார், தலைமைக் காவலர் முகம்மது லியாகத் அலி, காலவர்கள் இருசவேல், மணிமொழி, உதயச்சந்திரன் ஆகியோர் அந்தக் கணினி மையத்துக்கு சென்று சோதனையிட்டனர்.
 அப்போது, அங்கு போலி ஏ.டி.எம். அட்டைகள் தயாரிப்பது உறுதியானது. இதனையடுத்து, அந்தக் கடையில் இருந்த புதுச்சேரி லாஸ்பேட்டை லட்சுமி நகரைச் சேர்ந்த பாலாஜி (26), முருங்கப்பாக்கம் முதல் குறுக்குத் தெருவைச் சேர்ந்த ஜெயசந்திரன் (எ) சந்துரு (30) ஆகிய இருவரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
 விசாரணையில், கைது செய்யப்பட்ட பாலாஜி புதுவை
 பல்கலை.யில் கணினி தொழில்நுட்ப நிலையத்தில் தற்காலிக உதவியாளராகப் பணி செய்து வருவதும், கணினி மையத்தை நடத்தி வருவதும் தெரிய வந்தது.
 ஜெயசந்திரன் வள்ளலார் சாலையில் கணினி மையம் நடத்தி வந்தது தெரிய வந்தது. இவர்கள் இருவரும் ஸ்கிம்மர் இயந்திரம் மற்றும் ரகசிய கேமரா மூலம் ஏ.டி.எம். மையங்களில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்களை வைத்து, போலியான ஏ.டி.எம். அட்டைகளைத் தயாரித்து அதன் மூலம் ஏ.டி.எம். இயந்திரங்களில் பல லட்சங்களைத் திருடியது தெரிய வந்தது.
 மேலும், சென்னையைச் சேர்ந்த ஷியாம் என்பவர் மூலம் ஏ.டி.எம். அட்டை குறித்த தகவல்களை வாங்கி, போலியான ஏ.டி.எம். அட்டைகள் தயாரித்து அதன் மூலம் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.
 ஏ.டி.எம். அட்டைகளை ஆன்லைன் மூலமாக வாங்குவதைத் தெரிந்து கொண்டு, அதன் மூலம் புதுவை, தமிழ்நாடு, கேரளம், கர்நாடக மாநிலங்களில் பணத்தைத் திருடியுள்ளனர்.
 கேரளத்தைச் சேர்ந்த ரமீஸ், தமிழகத்தைச் சேர்ந்த கமல் ஆகியோர் உதவியுடன் இந்தத் தொழிலை விரிவுபடுத்தியுள்ளனர் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
 இதையடுத்து, பாலாஜி வீட்டில் இருந்த ரூ. 4 லட்சம் ரொக்கப் பணம், 44 கிராம் தங்க நகைகள், கார், பைக், 19 பி.ஓ.எஸ். இயந்திரங்கள், கணினிகள், போலி ஏ.டி.எம். அட்டைகள், வங்கிக் கணக்கு அட்டைகள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனர். மேலும், பாலாஜியின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ. 1 லட்சத்து 93 ஆயிரம் பணம் முடக்கப்பட்டது.
 அவரது தயார் கலையரசி பெயரில் இருந்த ரூ. 15 லட்சம் மதிப்புள்ள நிலப் பத்திரம் என மொத்தம் ரூ. 31 லட்சம் மதிப்பிலான பணம், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
 கைது செய்யப்பட்ட பாலாஜி, ஜெயச்சந்திரன் இருவரும் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நூதன திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட மற்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com