புதுவையில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கான தேர்தல்

புதுச்சேரியில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்வுக்கான தேர்தல் சனிக்கிழமை தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமையும் தேர்தல் தொடர்ந்து நடைபெற உள்ளது.

புதுச்சேரியில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்வுக்கான தேர்தல் சனிக்கிழமை தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமையும் தேர்தல் தொடர்ந்து நடைபெற உள்ளது.
கடந்த காலங்களில் புதுவை காங்கிரஸ் கட்சியில் இளைஞர் காங்கிரஸýக்கு கட்சித் தலைமையால் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வந்தனர். கடந்த 2008-ஆம் ஆண்டில் அகில இந்திய அளவில் இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளராக ராகுல் காந்தி பொறுப்பேற்ற பின்னர், இளைஞர் காங்கிரஸýக்கு மாநில அளவில் தேர்தல் நடத்தப்பட்டு, அதன் மூலம் தலைவர் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், புதுவையில் கடந்த 2015-க்குப் பிறகு தேர்தல் நடைபெறவில்லை. இதனால், தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதையடுத்து, தேர்தலுக்கான பணிகள் நடைபெற்றன. தொடர்ந்து, வேட்புமனு தாக்கல் கடந்த ஜூலை 30-இல் தொடங்கி ஆகஸ்ட் 2-ஆம் தேதி நிறைவடைந்தது.
இளைஞர் காங்கிரஸ் தேர்தலுக்கான விதிமுறை திருத்தப்பட்டு, தன்னுடன் இருவரை உறுப்பினராகச் சேர்ந்தால்தான் வாக்குரிமை என மாற்றம் செய்யப்பட்டது. இதனால், சுமார் ஒரு லட்சம் பேர் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டனர்.
தலைவர் பதவிக்கு போட்டியிட 13 பேருக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், ஜெய்தீபன், ஜெய்னா, காளிமுத்து, ரமேஷ், ரகுபதி, லட்சுமிகாந்தன், கார்த்திக், அசோக்ராஜ் உள்பட 9 பேர் போட்டியிடுகின்றனர்.
இவர்களுக்கு புதுச்சேரியிலும், தில்லியிலும் இரு கட்டங்களாக நேர்முகத் தேர்வு நடைபெற்றது. அதிக வாக்குகள் பெறுவோர் தலைவராகத் தேர்வு செய்யப்படுவார். அதையடுத்து, வாக்குகள் பெறும் நான்கு பேர் துணைத் தலைவர்களாகத் தேர்வு செய்யப்படுவர். இதில் ஒரு இடம் மகளிருக்காக ஒதுக்கப்படும்.
அதேபோல, 11 பொதுச் செயலர் பதவிகளுக்கான இடங்களுக்கு 28 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில் அமைச்சர் கந்தசாமியின் மகன் விக்னேஷ், காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனவேலு மகன் அசோக் ஷிண்டே உள்ளிட்டோரும் அடங்குவர். மேலும், தொகுதி அளவில் 15 பேர் கொண்ட கமிட்டியைத் தேர்வு செய்யவும் தேர்தல் நடைபெறுகிறது.
வேட்பாளர்களுக்கு பொதுத் தேர்தலில் வழங்கப்படுவது போல சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் முத்தியால்பேட்டை லட்சுமிகாந்தனை முதல்வர் நாராயணசாமி ஆதரிக்கிறார்.
அதேபோல, வில்லியனூர் ரமேஷுக்கு மாநிலத் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் ஆதரவு தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்தத் தேர்தல் ஆகஸ்ட் 11, 12-ஆம் தேதிகளில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், திமுக தலைவர் மு.கருணாநிதியின் மறைவால் தேர்தல் ஆகஸ்ட் 18, 19-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 30 தொகுதிகளில் தொகுதிக்கு ஒரு வாக்குச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 23 ஆயிரம் பேர் வாக்களிக்கின்றனர். ஒவ்வொருவரும் 3 வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும். இதற்கான பயிற்சிகள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, சனிக்கிழமை 16 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. வாக்குச் சாவடிக்குள் வாக்காளர்கள் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. 
இதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 19) மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வாக்குகள் எண்ணிக்கை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com