கழிவுநீர் கால்வாய் அமைக்காததைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

கழிவுநீர் கால்வாய் அமைக்காததைக் கண்டித்து பாமகவினர் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் வியாழக்கிழமை கொசு கொசுவலையுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கழிவுநீர் கால்வாய் அமைக்காததைக் கண்டித்து பாமகவினர் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் வியாழக்கிழமை கொசு கொசுவலையுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
புதுவை மாநிலம், ஊசுடு தொகுதி ராமநாதபுரம் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியிலிருந்து பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள், வேலைக்குச் செல்பவர்கள், பொதுமக்கள் என அனைவரும் அந்தப் பகுதியில் உள்ள மருத்துவமனை சாலை வழியாகச் சென்று வருகின்றனர். தற்போது அந்தச் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. மேலும், மழை பெய்து வருவதால், சாலையில் ஆங்காங்கே குளம் போல, மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால், அந்த வழியாகச் செல்வோர் விபத்துக்குள்ளாகின்றனர். 
மேலும், அந்தப் பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மழைநீருடன் கலந்து அங்கேயே தேங்கி நிற்கிறது. இதனால், அந்தப் பகுதியில் கொசு உற்பத்தி அதிகமாகி டெங்கு உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, இதைக் கண்டித்து புதுவை மாநில பாமக இளைஞரணி சார்பில், மாநில இளைஞரணிச் செயலர் ரமேஷ் தலைமையில் பாமகவினர் வியாழக்கிழமை வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தின் உள்ளே சென்று கொசுவலைகளைப் போர்த்திக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம், வில்லியனூர் காவல் ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையிலான போலீஸார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து,  அவர்கள் பிரச்னைகளை கோரிக்கை மனு அளித்துவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com