வாரியத் தலைவர் பதவி கேட்டு புதுவை காங்கிரஸில் போர்க்கொடி

வாரியத் தலைவர் பதவி கேட்டு புதுவை காங்கிரஸில் முக்கிய நிர்வாகிகள் சிலர் போர்க்கொடி தூக்கியுள்ளன

வாரியத் தலைவர் பதவி கேட்டு புதுவை காங்கிரஸில் முக்கிய நிர்வாகிகள் சிலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இது, அந்தக் கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 புதுவையில் கடந்த 2011-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த என்.ஆர். காங்கிரஸ், தேர்தலின்போது உழைத்த அக்கட்சியைச் சேர்ந்த இருவருக்கு நியமன எம்.எல்.ஏ.க்கள் பதவி, 20-க்கும் மேற்பட்டோருக்கு வாரிய தலைவர் பதவிகளை வழங்கியது.
 ஆனால், கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைந்தாலும், கட்சியினர் யாருக்கும் எந்தப் பதவியும் வழங்கப்படவில்லை என்ற அதிருப்தி, அக்கட்சி நிர்வாகிகளிடையே இருந்து வருகிறது.
 இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மூத்த நிர்வாகிகள் சிலர் திங்கள்கிழமை திடீரென ஒன்று கூடினர். இதில் பிரதேச காங்கிரஸ் துணைத் தலைவர்களான முன்னாள் எம்.எல்.ஏ. பாலாஜி, வினாயகமூர்த்தி, பொதுச்செயலாளர்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், சின்னசாமி, வட்டார காங்கிரஸ் தலைவர் ரகுமான், இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளையராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸின் வெற்றிக்கு உழைத்த கட்சியினருக்கு பதவிகளை வழங்க வேண்டும், அரசின் வாரிய தலைவர்கள் பதவியை வழங்க வேண்டும், அரசுத் துறைகளில் உள்ள குழு உறுப்பினர் பணியிடங்களில் கட்சியினரை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
 கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டம் பற்றி மாநில காங்கிரஸ் தலைவரும், பொதுப்பணித் துறை அமைச்சருமான ஆ. நமச்சிவாயத்துக்கு தெரிய வந்தது. இதையடுத்து அமைச்சர் ஆ.நமச்சிவாயம், கூட்டத்தில் பங்கேற்ற கட்சியினரைத் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, தங்களது மனக்குமுறல்களை அவர்கள் தெரிவித்தனர்.
 அப்போது பேசிய நமச்சிவாயம், வருகிற பிப்.15-ஆம் தேதி கட்சி அலுவலகத்துக்கு வரும் முதல்வர் நாராயணசாமியுடன் இதுகுறித்து கலந்துபேசி குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து, கூட்டத்தை கட்சியினர் முடித்துக் கொண்டனர்.
 இந்தத் திடீர் கூட்டம் புதுச்சேரி காங்கிரஸ் கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com