புதுச்சேரியில் டெம்போ கட்டணம் நாளை முதல் உயர்வு

புதுச்சேரியில் டெம்போக்களுக்கான பயணக் கட்டணம் வியாழக்கிழமை (பிப்.15) முதல் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் டெம்போ கட்டணம் நாளை முதல் உயர்வு

புதுச்சேரியில் டெம்போக்களுக்கான பயணக் கட்டணம் வியாழக்கிழமை (பிப்.15) முதல் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 தமிழகத்தில் அரசுப் பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து, புதுவையில் இருந்து வெளி மாநிலம் செல்லும் பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. புதுவைக்குள் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்படவில்லை. ஆனால் தனியார் பேருந்துகளில் கட்டணத்தை உயர்த்தி வசூலித்து வருகின்றன. அரசுப் பேருந்துகளில் குறைந்த பட்ச கட்டணம் ரூ.5-ஆக உள்ள நிலையில், தனியார் பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.7-ஆக உள்ளது.
 அதேபோல பல்வேறு வாகனங்களிலும் கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தனியாரால் இயக்கப்படும் டெம்போக்களுக்கான கட்டணமும் உயர்த்தப்படுகிறது. அதாவது டெம்போக்களில் குறைந்தபட்ச கட்டணம் தற்போது ரூ.5-ஆக உள்ளது. இது பிப்.15-ஆம் தேதி முதல் ரூ.7-ஆக உயர்த்தி வசூலிக்கப்படும் என டெம்போக்களில் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
 இது குறித்து புதுச்சேரி பிரதேச டெம்போ உரிமையாளர்கள் சங்கச் செயலர் மணிவண்ணன் கூறியதாவது: கடந்த ஆண்டு டெம்போக்களுக்கான காப்பீடுத் தொகை ரூ.14 ஆயிரமாக இருந்தது. இது இந்த ஆண்டு ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஆண்டுதோறும் காப்பீட்டுத் தொகையை உயர்த்தி வருகின்றனர். டெம்போவுக்கு வண்ணம் பூச கடந்த ஆண்டு ரூ.5,500 கூலி கேட்டனர். இந்த ஆண்டு ரூ.6,500 கேட்கின்றனர். உதிரி பாகங்களின் விலையும் உயர்ந்துவிட்டது. ஒர்க்ஷாப், லேத் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கட்டணம் உயர்ந்துவிட்டது. இதனால் டெம்போக்களில் பயணக் கட்டணத்தை உயர்த்தியுள்ளோம். இந்த கட்டண உயர்வு பிப்.15-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். 2011-ஆம் ஆண்டுக்குப் பின்னர் தற்போதுதான் கட்டணத்தை உயர்த்துகிறோம்.
 புதுச்சேரியில் 4 வழித்தடங்களில் 127 டெம்போக்கள் ஓடுகின்றன. 2011-ஆம் ஆண்டு முதல் டெம்போவுக்கான வாடகையானது வேலை நாள்கள், விடுமுறை தினங்கள் என பிரித்து நாள் வாடகை வசூலிக்கப்பட்டு வந்தது. அதாவது திங்கள் முதல் வியாழக்கிழமை வரை ரூ.900-ம், வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் ரூ.850-ம் நாள் வாடகையாக நிர்ணயிக்கப்பட்டது.
 ஆனால், பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அடுத்து, பயணிகள் அதிகம் வரவில்லை எனக்கூறி ஓட்டுநர்கள் வாடகையை குறைத்துவிட்டனர். தற்போது ரூ.700 முதல் ரூ.850 வரை மட்டுமே வாடகை உரிமையாளர்கள் வசூலித்து வருகின்றனர். தற்போது கட்டண உயர்வு பிப்.15-ஆம் தேதி அமலுக்கு வந்த பின்னர் 3 நாள்கள் வரும் வசூலைக் கணக்கிட்டு, ஓட்டுநர்கள் செலுத்த வேண்டிய வாடகையை உயர்த்துவது குறித்து இறுதி செய்யப்படும் என்றார்.
 இது குறித்து சிஐடியூ புதுச்சேரி பிரதேச டெம்போ ஓட்டுநர் சங்க பொறுப்பாளர் மதிவாணன் கூறியதாவது: டெம்போக்கள் கட்டணம் உயர்வு குறித்து ஓட்டுநர்களிடம் எந்தவித கருத்தும் கேட்கப்படவில்லை. டெம்போக்களுக்கு தினமும் வாடகையாக தற்போது ஓட்டுநர்கள், உரிமையாளர்களிடம் ரூ.900 வழங்கி வருகின்றனர். இதை உயர்த்தி வசூலிக்க உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
 இதனால் தற்போது கட்டணத்தை உயர்த்தி வசூலிக்கும் நோட்டீசை டெம்போக்களில் ஓட்டியுள்ளனர். இதையடுத்து வாடகையை ரூ.1200-ஆக உயர்த்தித் தர ஓட்டுநர்களை நிர்பந்திப்பார்கள். டெம்போ கட்டணத்தை உயர்த்தி வசூலிப்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com