மத்திய அரசின் மருத்துவக் காப்பீடு திட்டத்தை புதுவையில் அமல்படுத்த வலியுறுத்தல் 

மத்திய அரசின் மருத்துவக் காப்பீடு திட்டத்தை புதுவையில் அமல்படுத்த மாநில அரசும், துணை நிலை ஆளுநரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

மத்திய அரசின் மருத்துவக் காப்பீடு திட்டத்தை புதுவையில் அமல்படுத்த மாநில அரசும், துணை நிலை ஆளுநரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தியது.
 இது குறித்து இந்த இயக்கத்தின் பொதுச் செயலர் முருகானந்தம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
 புதுவை அரசானது மருத்துவ இடருதவி திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொள்ளும் ஏழை நோயாளிகளுக்கு ரூ.2.50 லட்சம் வரை நிதியுதவி வழங்கி வருகிறது. இந்தத் திட்டத்தில், முதலில் நோயாளிகள் பணத்தை திரட்டி செலவு செய்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.
 ஏழை நோயாளிகள் சிகிச்சைக்கான பணத்தை திரட்ட முடியாமல், உயர் சிகிச்சை பெற்றுக்கொள்ள முடிவதில்லை. ஆனால், மருத்துவக் காப்பீடு திட்டம் அமலில் இருந்தால் அதற்கான அடையாள அட்டையை பெற்றுக்கொண்டு தனியார் மருத்துவமனைகள் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளும். ஆனால், இந்தத் திட்டத்தை அமல்படுத்த புதுவை அரசு தயங்கி வருகிறது.
 இந்த நிலையில், மத்திய அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில் தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அறிவித்துள்ளது.
 இதை முதலில் புதுவையில் அமல்படுத்த பிரதமருக்கு புதுவை முதல்வர் கோரிக்கை வைக்க வேண்டும்.
 புதுவை மாநிலம் நிதி நெருக்கடியில் உள்ளதாலும், வருமானத்தை அதிகரிப்பதற்கான வளங்கள் ஏதும் இல்லாததாலும் மாநில அரசிடம் நிதி எதையும் கேட்காமல் முழு தொகையையும் மத்திய அரசே செலவு செய்து அமல்படுத்த முன்வர வேண்டும்.
 புதுவை மக்களின் நலன் கருதி இந்த விஷயத்தில் துணை நிலை ஆளுநர் கிரண் பேடியும் மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com