உரிமைக் குழு நோட்டீஸ் விவகாரம்: வருத்தம் தெரிவித்தார் என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. 

புதுவை சட்டப்பேரவையில் விதிகளை மீறி நடந்துகொண்டதாக தனக்கு அனுப்பப்பட்ட உரிமைக் குழு நோட்டீஸுக்கு என்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர் அசோக் ஆனந்த் புதன்கிழமை பதில் அளித்தார்.

புதுவை சட்டப்பேரவையில் விதிகளை மீறி நடந்துகொண்டதாக தனக்கு அனுப்பப்பட்ட உரிமைக் குழு நோட்டீஸுக்கு என்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர் அசோக் ஆனந்த் புதன்கிழமை பதில் அளித்தார்.
 கடந்த ஆண்டு ஜூன் மாதம் புதுவை சட்டப்பேரவை நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரின் இறுதி நாளில் என்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர்கள் அசோக் ஆனந்த், ஜெயபால் ஆகியோர் வெளியில் இருந்து சிறிய ஒலிபெருக்கியுடன் கூடிய மைக்கை எடுத்து வந்து பேசினர். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
 இதையடுத்து பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் உத்தரவின் பேரில், அவர்களிடம் இருந்த கை ஒலிபெருக்கியை சபை காவலர்கள் பறித்தனர். மேலும், இருவரையும் அன்று ஒருநாள் முழுவதும் பேரவைத் தலைவர் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
 இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் காங்கிரஸ் உறுப்பினர்கள், என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர்கள் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்தனர்.
 இந்தப் புகாரை உரிமை மீறல் குழுவிடம் பேரவைத் தலைவர் அளித்தார்.
 இப்புகாருக்கு விளக்கம் அளிக்க பேரவை துணைத் தலைவர் சிவக்கொழுந்து தலைமையிலான உரிமை மீறல் குழு இருவருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து இருவரும் விளக்கமும் அளித்தனர்.
 இதில் ஜெயபாலின் விளக்கம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
 அதேநேரத்தில், அசோக் ஆனந்து பேரவைத் தலைவர் ஏற்கெனவே தண்டித்து விட்டதால், மீண்டும் அதே புகாருக்கு விளக்கம் கேட்பது சரியானதல்ல. எனவே, அந்தப் புகாரை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தார். இந்த விளக்கத்தால் திருப்தி அடையாத உரிமை மீறல் குழு புதன்கிழமை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கக் கூறியிருந்தது.
 இதையடுத்து, அசோக் ஆனந்த், ஜெ.ஜெயபால் ஆகியோர் சட்டப்பேரவைக்கு புதன்கிழமை வந்து உரிமை மீறல் குழுவின் தலைவர் சிவக்கொழுந்துவை சந்தித்துப் பேசினர். பின்னர் பேரவைத் தலைவரையும் தனியாக சந்தித்துப் பேசினர்.
 பேரவைத் தலைவரை சந்தித்து வெளியே வந்தபோது அசோக் ஆனந்த், ஜெயபால் ஆகியோரை செய்தியாளர்கள் சந்திக்க முயற்சித்தனர். ஆனால், அவர்கள் விரைவாக காரில் ஏறிச் சென்றுவிட்டனர். இது குறித்து பேரவை துணைத் தலைவர் சிவக்கொழுந்து கூறுகையில், உரிமை மீறல் குழு கேட்ட விளக்கத்துக்கு அசோக் ஆனந்த் பதில் அளித்துவிட்டார். அதில் தனது செயலுக்கு வருத்தம் தெரிவிப்பதாக பதிவு செய்துள்ளார். அது குறித்து உரிமை மீறல் குழு மீண்டும் கூடி முடிவு செய்யும். அதன்பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும் என்றார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com