இஸ்லாமிய அமைப்புகளின் கருத்தறிந்து முத்தலாக் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்: புதுவை முதல்வர் வலியுறுத்தல்

இஸ்லாமிய அமைப்புகளிடம் கருத்துக்கேட்ட பிறகே முத்தலாக் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி வலியுறுத்தினார்.

இஸ்லாமிய அமைப்புகளிடம் கருத்துக்கேட்ட பிறகே முத்தலாக் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி வலியுறுத்தினார்.
 புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு அவர் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:
 புதுவையில் காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசுக்கு 2017-ஆம் ஆண்டில் பல சோதனைகள், எதிர்ப்புகள், போராட்டங்கள் இருந்தன. இருப்பினும் நானும், அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் முடிந்தவரை மத்தியில் மாற்று ஆட்சி நடந்தாலும் பொலிவுறு திட்டம், குடிநீர்த் திட்டம், மட்டுமன்றி சுற்றுலாத் துறை, காலாசாரத் துறை உள்ளிட்ட பல துறைகளில் பல்வேறு திட்டங்களையும் கொண்டு வந்துள்ளோம்.
 புதுச்சேரியிலிருந்து விமான சேவையைத் தொடங்கியுள்ளோம். விரைவில் துறைமுகத் திட்டத்தைத் தொடங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். தொழில்சாலைகளை கொண்டுவர புதிய தொழில்கொள்கையை
 அறிமுகப்படுத்தியுள்ளோம். பல நல்ல திட்டங்களை நிறைவேற்றினாலும், சில திட்டங்களுக்கு காலதாமதம் ஆகிறது. இதற்காக நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டையைச் சரி செய்து படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
 அசம்பாவிதமின்றி புத்தாண்டு கொண்டாட்டம்: புத்தாண்டில் புதுச்சேரி மாநிலத்துக்கு வரலாறு காணாத அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்தனர். சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க காவல் துறை, உள்ளாட்சித் துறை, பொதுப்பணித் துறை, மின்துறை, சுற்றுலா துறை ஆகியவை மூலம் நானும், துறை அமைச்சர்களும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தோம். இதில் தலைமைச் செயலர், துறைச் செயலர்கள், துறைத் தலைவர்கள் ஆகியோரின் பங்களிப்பும் உள்ளது.
 இதனால் லட்சக்கணக்கானோர் வந்தபோதிலும், அசம்பாவிதமின்றி புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சி நடந்தேறியது. இதற்காக காவல்துறை டிஜிபி மற்றும் அதிகாரிகளைப் பாராட்டுகிறேன்.
 சட்டம்-ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருப்பது சுற்றுலாப் பயணிகள் வருகைக்கு ஏதுவான சூழலாகும்.
 இந்த விஷயத்தில் எங்களோடு இணைந்து பணிபுரிந்த மாநில நிர்வாகியை (துணைநிலை ஆளுநர்) நினைவுகூரக் கடமைப்பட்டுள்ளேன். அவருடன் மாற்றுக் கருத்து இருந்தாலும் அவரது பணியை பாராட்டுகிறேன்.
 2018-ஆம் ஆண்டில் கட்டுமானப் பணி, விவசாயம், தொழில் துறை, சுற்றுலாத் துறை ஆகியவற்றில் மத்திய அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய சலுகைகளையும், நிதி ஆதாரத்தையும் பெற நானும், அமைச்சர்களும் தொடர்ந்து முயற்சி எடுப்போம்.
 முத்தலாக் சட்டம்: உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், மத்திய அரசு முத்தலாக் மூலம் விவாகரத்து செய்வது சட்டப்படி செல்லாது என்பதற்கான சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது.
 தற்போதுள்ள சட்ட மசோதாவில் கணவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கும் நிலை உள்ளது.
 அப்படியென்றால் அவரது மனைவியின் நிலை என்ன ஆகும். எனவே, இஸ்லாமியர்களைப் பாதிக்காத வகையில், சம்பந்தப்பட்டவர்களை பிரதமர் மோடி அழைத்துப் பேசி நல்ல முடிவு எடுப்பார் என நம்புகிறேன் என்றார் நாராயணசாமி.
 
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com