புதுவையில் புதிதாக அரசு ஊழியர் நியமனத்துக்குத் தடை

புதுவை அரசு நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருவதால், புதிதாக அரசு ஊழியர் நியமனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதுவை அரசு நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருவதால், புதிதாக அரசு ஊழியர் நியமனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 இதுதொடர்பாக புதுவை நிதித் துறை சார்பில் அதிகாரிகளுக்கு புதன்கிழமை அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:
 அரசுத் துறைகள் நேரடி பணி நியமனத்தின்படி ஆள்களை நேரடியாக நியமிக்கக் கூடாது. காலிப் பணியிடங்களை நிரப்புவது பணியிடமாற்றம், பதவி உயர்வு, வேறு துறைகளில் இருந்து முறையான ஒப்புதலுடன் மாற்றம் ஆகியவற்றின் மூலமே நிரப்ப வேண்டும்.
 துறையில் கூடுதல் ஊழியர்கள் இருந்தால், பணி நிரவல் முறையில் காலிப் பணியிடங்களை நிரப்பவேண்டும்.
 அதிக பணியாளர்கள் இருந்தால், குறிப்பிட்ட திட்டங்களில் பணியமர்த்தலாம். வழக்கமான அதிகாரப்பூர்வ பணிக்காக ஊழியர்களுக்கான வவுச்சர் கட்டணத்தை தடுக்க துறை முயற்சித்துள்ளது.
 ஹோட்டல்களில் கூட்டங்கள், கருத்தரங்குகள் நடத்தக் கூடாது. விமானப் பயணத்தை அதிகாரிகள் சாதாரண வகுப்பு பிரிவிலே மேற்கொள்ள வேண்டும். விமான வலைதளத்தில் இருந்து குறைந்த விலையில் விமான பயணச்சீட்டை பதிவு செய்ய வேண்டும். அலுவலகச் செலவுகளை 10 சதவீதம் குறைக்க வேண்டும். அதில், தொலைபேசிக் கட்டணம், எரிபொருள் செலவு, டீ, காபி செலவு ஆகியவை அடங்கும்.
 அதேபோல, புதிய வாகனங்கள் வாங்கக் கூடாது. அவசர ஊர்தி (ஆம்புலன்ஸ்), தீயணைப்பு வாகனங்கள் போன்றவற்றுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை.
 வாகனங்களை ஒப்பந்த அடிப்பைடையில் அமர்த்தக் கூடாது. அலுவலகக் கட்டடத்தின் அருகிலேயே வாகனங்களை நிறுத்த வேண்டும். வாகனங்களை எந்தச் சூழ்நிலையிலும் ஓட்டுநர்களின் வசிப்பிடத்துக்கு எடுத்துச் செல்லக் கூடாது.
 மின்சார பயன்பாட்டுக்கான செலவினத்தில் அனைத்து அலுவலகங்கள் மற்றும் பொதுக் கட்டடங்கள் மூலம் குறைந்தபட்சம் 5 சதவீதம் குறைக்கப்பட வேண்டும்.
 வேலைகள், திட்டங்கள் மற்றும் சரக்குகள், சேவைகளை கொள்முதல் செய்வதற்கான எந்தவொரு ஒப்பந்தப்புள்ளியும் நிதி ஆதாரங்களின் அடிப்படையில் நிர்வாக ஒப்புதலுடன் செய்யப்பட வேண்டும்.
 அங்கீகரிக்கப்பட்ட வரவு-செலவு திட்டத்தில் வழங்கப்படாத பொருள்களின் மீது புதிய திருத்தங்கள் செய்யப்படமாட்டாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com