ஆளுநர் கிரண் பேடியை விமர்சிக்க மாட்டோம்: அமைச்சர் மு.கந்தசாமி

புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடியை இனிமேல் விமர்சிக்க மாட்டோம் என்று சமூக நலத் துறை அமைச்சர் மு.கந்தசாமி தெரிவித்தார்.

புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடியை இனிமேல் விமர்சிக்க மாட்டோம் என்று சமூக நலத் துறை அமைச்சர் மு.கந்தசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் புதுவையில் சனிக்கிழமை மேலும் கூறியதாவது: அண்மையில் ஆளுநர் கிரண் பேடியை சந்தித்து பேசியபோது, ஆளுநர், அமைச்சர்கள், அதிகாரிகள் ஒன்றாக செயல்பட்டால்தான் மாநிலம் வளர்ச்சி அடையும். நலத்திட்டங்கள் நிறைவேற்ற முடியும் என்பதால் ஆளுநருடன் ஓர் ஒப்பந்தம் செய்துள்ளோம். அதன்படி, ஆளுநரை நான் குறை சொல்ல மாட்டேன். ஆளுநருக்கு எதிராக நான் ஏதேனும் கூறினால் அதை ஒன்றுக்கு மூன்றாக அதிகாரிகள் ஆளுநரிடம் தெரிவிக்கின்றனர். தமிழ் தெரியாததால் ஆளுநரும் தவறாகப் புரிந்து கொள்கிறார். இதனால் இடைவெளி அதிகரிக்கிறது.
எனது துறை சார்ந்தவைகளுக்கு ஒப்புதல் கிடைக்காதததால் ஆளுநர் குறித்து நான் பல்வேறு கருத்துகளை கூறிவிட்டேன். இனிமேல் ஆளுநர் பற்றி குறை கூறுவதை நிறுத்துவிடுகிறேன். நீங்களும் உங்களுடைய செயல்பாடுகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று ஆளுநருடன் கூறியுள்ளோம். ஆகவே இப்போது இடைவெளி இல்லாமல் மாநில முன்னேற்றத்துக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அவரிடம் தெரிவித்தேன்.
நிதித் துறைச் செயலர் மீது புகார்: அண்மையில் கூட, பிற்படுத்தப்பட்டோர் பொங்கல் துணி வாங்கி கொள்வதற்கான பணம் வழங்கும் கோப்பு திரும்பி வந்ததில்கூட ஆளுநர் மீது எனக்கு வருத்தம் இல்லை. ஏனென்றால் நிதித் துறைச் செயலர் ஆளுநரிடம் கூறி அனுமதி பெற்று வந்திருக்கலாம். ஆனால், ஆளுநர் ஏற்கெனவே கூறியிருந்த நிதியை வேறு துறைக்கு மாற்றக்கூடாது என்ற கருத்தை அப்படியே பின்பற்றி கோப்பை திருப்பி அனுப்பிவிட்டார்.
இதே நிதித் துறைச்செயலர்தான் கடந்த ஆட்சியில் கட்டுமான வாரியம், எரிசக்தி கழகம், சிறப்புக்கூறு நிதி ஆகியவைகளை எடுத்து மிக்ஸி, கிரைண்டர் வாங்க அனுமதி கொடுத்துள்ளார். நிதித்துறைச் செயலர் அமைச்சர்களுக்கு எதிராக செயல்படுகிறார். பண்டிகையின்போது ஏழை மக்களுக்கு வேட்டி, சேலை கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் நிதித் துறைச் செயலருக்கு வேண்டும். பொங்கலுக்குப் பிறகு துணி கொடுப்பது வீண். புதுச்சேரி மண்ணின் மைந்தராக உள்ள நிதி செயலர் புதுச்சேரி முன்னேற்றத்துக்கு கவனம் செலுத்த வேண்டும்.
எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி ஆளுநரை சந்திப்பது தவறு இல்லை. நான் கூட ரங்கசாமியுடன் தொடர்ந்து பேசி வருகிறேன். அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து சென்று தனிக் கட்சி தொடங்கியவர். எங்களுக்குள் விரோதம் ஏதும் இல்லை. பொங்கல் வாழ்த்து கூறுவது தவறு இல்லை. அவர் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேருவது பற்றி அவர்தான் முடிவு எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com