பொங்கல் பண்டிகை: ஆளுநர், முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

புதுவை மாநில மக்களுக்கு ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள் மற்றும் பல்வேறு தலைவர்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.அவற்றின் விவரம்:

புதுவை மாநில மக்களுக்கு ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள் மற்றும் பல்வேறு தலைவர்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அவற்றின் விவரம்:
ஆளுநர் கிரண் பேடி: தை மாதத்தில், நல்ல ஒளிமயமான எதிர்காலத்தின் தொடக்கமாகவும், வளமான வாழ்வின் குறியீடாகவும் கொண்டாடப்படும் பொங்கல் திருநாள் தமிழர்களின் போற்றுதலுக்குரிய மிகப்பெரிய பண்டிகையாகும். இந்தப் பருவத்தில் அறுவடை செய்யும்பொழுது நிறைந்து வழியும் அரிசி, பயிறு வகைகள், கரும்பு, மஞ்சள், தானியங்கள் ஆகியவற்றுக்கெல்லாம் மக்கள் நன்றி தெரிவிப்பது தனிச்சிறப்பு வாய்ந்தது. மேலும், இப்பண்டிகை குடும்ப விழாவும்கூட. பொங்கல் விழாவின்போது உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும், புதுச்சேரி மக்களுக்கும் எனது பொங்கல் நல் வாழ்த்துகள்.
முதல்வர் வே.நாராயணசாமி: பொங்கல் திருநாளை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட, நம் புதுச்சேரி அரசு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்குகிறது.
மக்களின் மகிழ்ச்சியினை உறுதிசெய்யும் அரசின் நடவடிக்கையைத் தடுக்க நினைத்தவர்களின் முட்டுக்கட்டையை போகித் தீயிட்டுப் பொசுக்கி மக்கள் வாழ்வில் மகிழ்ச்சியைப் பொங்க வைத்துள்ளது. புதுச்சேரி அரசு இந்த வெற்றிப் பொங்கல் இனி எல்லாவற்றிலும் தொடரும் என்பதில் ஐயமில்லை.
கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்கான தடையை எதிர்த்து இளைஞர்களும், பெண்களும் நடத்திய போராட்டம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். அவர்களின் போராட்டத்துக்கு தலைவணங்கி, அந்தத் தடையையும் சட்டப்பேரவையில் சட்டம் இயற்றி, வெற்றிகரமாக உடைத்தெறிந்து நம் பண்பாட்டை மீட்டெடுத்தது உங்களின் புதுச்சேரி அரசு.
இந்த தைப்பொங்கல் திருநாளில் புதுவை மக்களின் வாழ்வில் வளமும், நலமும், அமைதியும், மகிழ்ச்சியும் பொங்கிட வேண்டும் என வேண்டி, புதுவை மக்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.
சட்டப்பேரவைத் தலைவர் வெ.வைத்திலிங்கம்: உழவனின் உன்னதத்தினைப் போற்றிடும் வகையிலும், உயிர்களை வாழ்விக்க வளம் தரும் இயற்கையினை வழிபடும் வகையிலும் வேற்றுமைகளை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து உள்ளத்தில் உவகையோடு பொங்கல் பண்டிகையினை கொண்டாடி மகிழ்வோம். கடந்த ஆண்டைப்போல் பொய்க்காமல் இந்த ஆண்டு நல்ல மழை பெய்துள்ளது. எனவே வேளாண் மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வேளாண்மையில் ஈடுபடவும், பிறர் அனைவரும் வேளாண் மக்களையும் கெளரவிக்கவும், தம்மால் முடிந்தவரை வேளாண்மையை காக்கவும் பாடுபட உறுதியேற்போம். குறிப்பாக கஷ்டப்பட்டு வேளாண்மையால் தயார் செய்யப்பட்ட உணவு பொருட்களை வீணாக்காமல் பயன்படுத்தவும் உறுதியேற்போம்.
எதிர்க்கட்சி தலைவர் என்.ரங்கசாமி: இந்த தமிழர் திருநாள் இனிமையான மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் கொடுத்து, வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும், வேளாண்மை செழிக்கட்டும், விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் வாழ்வில் இன்பம் கனியட்டும் என்று எனது வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்.
புதுவை காங்கிரஸ் மாநில தலைவர் ஆ. நமச்சிவாயம்: பாரம்பரியம் மாறாமல் தமிழர் கலாச்சாரத்துடன் கொண்டாடப்படும் ஒப்பற்ற திருநாளாக பொங்கல் திருநாள் இன்றளவும் திகழ்ந்து வருகிறது. பொங்கல் திருநாள் தமிழர்களின் வீரத்தை போற்றும் உன்னதப் பெருநாள்.
மக்கள் மகிழ்ச்சி பொங்க கொண்டாடும் பொங்கல் திருநாளுடன், திருக்குறள் தந்த தெய்வப்புலவர் திருவள்ளுவர் பிறந்தநாளையும் பெருமையுடன் கொண்டாடி மகிழ்வோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com