பொங்கல் பரிசுத் தொகுப்பு கிடைப்பதில் இழுபறி

புதுச்சேரியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு அனைவருக்கும் கிடைக்காததால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு கிடைப்பதில் இழுபறி

புதுச்சேரியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு அனைவருக்கும் கிடைக்காததால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
 புதுவையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க துணை நிலை ஆளுநர் கிரண் பேடி கடந்த 10-ஆம் தேதி ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை அரசு முடுக்கிவிட்டது.
 புதுவை மாநிலத்தில் புதுச்சேரி, காரைக்கால், யேனாம் ஆகிய 3 பிராந்தியங்களிலும் உள்ள 3 லட்சத்து 31 ஆயிரத்து 244 குடும்ப அட்டைகளுக்கு ரூ.6.33 கோடி செலவில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இந்தத் திட்டத்தை முதல்வர் நாராயணசாமி கடந்த 12-ஆம் தேதி உருளையன்பேட்டை கோவிந்தசாலையில் உள்ள நியாய விலைக் கடையில் தொடக்கி வைத்தார்.
 இதில் பச்சரிசி ஒரு கிலோ, பச்சைப் பயறு, வெல்லம் தலா அரை கிலோ, முந்திரி 25 கிராம், ஏலக்காய் 10 கிராம் ஆகிய 5 பொருள்கள் இடம் பெற்றிருந்தன. மேலும் இந்த நிகழ்ச்சியில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 20 கிலோ அரிசியும் வழங்கப்பட்டது.
 மேலும், பொங்கல் பரிசுத் தொகுப்பை விரைந்து வழங்க வேண்டும் என்பதற்காக, அதுவரை காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நியாய விலைக் கடை ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை சமூக நலத் துறை அமைச்சர் மு.கந்தசாமி முடிவுக்கு கொண்டுவந்தார். பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்குவதற்காக பொங்கல் தினமான திங்கள்கிழமையும் (ஜன.14) நியாய விலைக் கடை ஊழியர்கள் கடைகளை திறந்து வைத்து காத்திருந்தனர். ஆனால், பெரும்பாலான கடைகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வந்து சேரவில்லை. ஆனால், ஊழியர்கள் மட்டுமே காத்திருந்தனர்.
 பொங்கல் பரிசுத் தொகுப்பு வந்திருக்கும் என்ற ஆர்வத்தில் பொதுமக்கள் நியாய விலைக் கடைகளுக்கு வந்து கடை ஊழியர்களிடம் கேட்டனர். ஆனால், இதுவரை வரவில்லை என பெரும்பாலான கடை ஊழியர்கள் தெரிவித்ததால், ஒரு சில கடைகளில் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
 இது குறித்து அரசுத் தரப்பில் கேட்டபோது, பொதுவாக ஒரு மாதத்துக்கு முன்பே பொங்கல் பரிசுத் தொகுப்பை கொள்முதல் செய்து பொங்கலுக்கு 10 நாள்களுக்கு முன்பாக நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பிவிடுவோம். ஆனால், இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு கோப்பில் துணை நிலை ஆளுநர் காலதாமதமாகவே கையெழுத்திட்டார். பொங்கல் தினத்துக்கு ஒரு சில நாள்களுக்கு முன்பாகவே கையெழுத்திட்டதால் பொருள்களை முழுமையாக கொள்முதல் செய்ய முடியவில்லை. ஒரு சில தொகுதிகளில் ஏழைகள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்கு மட்டும் முதல்கட்டமாக பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டது. தொடர்ந்து பிற தொகுதிகளிலும் ஓரிரு நாள்களுக்குள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com