தேசிய மருத்துவக் குழு அமைக்க எதிர்ப்பு: மாணவர் - பெற்றோர் சங்கம் போராட்டம் நடத்த முடிவு

தேசிய மருத்துவக் குழுவை அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தப் போவதாக புதுச்சேரி சென்டாக் மாணவர் - பெற்றோர் சங்கம் தெரிவித்துள்ளது.

தேசிய மருத்துவக் குழுவை அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தப் போவதாக புதுச்சேரி சென்டாக் மாணவர் - பெற்றோர் சங்கம் தெரிவித்துள்ளது.
 இதுகுறித்து அந்தச் சங்கத்தின் தலைவர் நாராயணசாமி, பொருளாளர் வி.சி.சி.நாகராஜன் ஆகியோர் வியாழக்கிழமை வெளியிட்ட கூட்டறிக்கை:
 தேசிய மருத்துவக் குழு அமைப்பை உருவாக்காமல் தடுத்து, மாநில அரசுகளின் உரிமைகளைப் பாதுகாக்க அனைத்து அரசியல் கட்சிகளும் வரவுள்ள மக்களவைக் கூட்டத் தொடரில் வலியுறுத்த வேண்டும்.
 இந்திய மருத்துவக் கழகம் என்ற அமைப்பை மாற்றி, தேசிய மருத்துவக் குழு என்ற அமைப்பை உருவாக்க உள்ளதை மத்திய அரசு கைவிடவேண்டும். தேசிய மருத்துவக் குழு என்ற அமைப்பை ஏற்படுத்தினால் மாநில அரசுகளின் மருத்துவ உரிமைகள் பறிக்கப்படும் சூழ்நிலை உருவாகும். மாநில அரசு மூலமாக மருத்துவம் படிக்கும் இடங்கள் 40 சதவீதமாகவும், நிர்வாக ஒதுக்கீட்டு மருத்துவ இடங்கள் 60 சதவீதமாகவும் மாறிவிடும். இதனால், மாநில அரசுகளின் உரிமைப் பாதிக்கப்படும்.
 தேசிய மருத்துவக் குழு உருவாக்கப்படுமானால், மருத்துவக் கல்லூரிகள் யாரிடமும் எந்தவித அனுமதியும் இன்றி, கூடுதலாக மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளலாம் என்ற தன்னிச்சையான அனுமதிக்கு வழிவகுக்கும். இதனால், தனியார் மருத்துவக் கல்லூரிகள் மாநில அரசுக்குக் கட்டுப்படாத நிலை உருவாகும். மேலும், பல்வேறு முறைகேடுகள் உருவாகும். இதைக் கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு முழு அதிகாரம் அளிக்க வேண்டும். இல்லையென்றால், தேசிய மருத்துவக் குழுவை உருவாக்கக் கூடாது.
 நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றால் மட்டுமே மருத்துவம் படிக்கத் தகுதியானவர்கள் என்ற சட்டத்தைக் கொண்டு வந்து மாணவர்களை அலைக்கழித்தது மட்டுமன்றி, தற்போது, மருத்துவம் படித்து வெளிவரும் மாணவர்கள் உலஐபஎன்ற தேர்வை எழுதினால் மட்டுமே மருத்துவம் பார்க்க முடியும் என்ற நிலையை உருவாக்கியுள்ளது. அப்படி என்றால், ஒவ்வோர் நிலையிலும் தேர்வு என்று மாணவர்களின் தகுதியை ஆய்வு செய்வது என்பது, மருத்துவக் கல்லூரிகள் ஒழுங்காகப் பாடம் நடத்தவில்லை என்றும், அதை அரசுகள் கண்காணிக்கவில்லை என்றும்தான் கருதிக் கொள்ள முடியும்?
 மருத்துவக் கல்லூரியில் 5 ஆண்டுகள் படிக்கும் மாணவர் ஒவ்வோர் ஆண்டும் தேர்வுகளை எழுதி, தகுதியை உயர்த்திக் கொண்டு, அடுத்த நிலைக்கு வரும் நிலையில், உலஐப தேர்வு ஏன்? அப்படியானால் எங்கே பிழை உள்ளது? யாரைக் குறை கூறுவது?
 மருத்துவக் கல்லூரிகளையா? பல்கலைக்கழகங்களையா அல்லது மத்திய அரசின் பாடத் திட்டத்தையா என்று மக்கள் கேள்வி எழுப்பும் நிலை உருவாகும்.
 எனவே, இதை எதிர்த்து விரைவில் போராட்டம் நடத்தப்படும் என அந்தக் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com