நகராட்சி அங்காடியில் எம்.எல்.ஏ. அலுவலகம்: ஆணையருக்கு மத்திய தகவல் ஆணையம் நோட்டீஸ்

நகராட்சிக்குச் சொந்தமான அங்காடியில் எம்.எல்.ஏ. அலுவலகம் செயல்படுவது தொடர்பாக காணொலிக் காட்சி விசாரணையில் ஆஜராகாத உழவர்கரை நகராட்சி ஆணையருக்கு மத்திய தகவல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

நகராட்சிக்குச் சொந்தமான அங்காடியில் எம்.எல்.ஏ. அலுவலகம் செயல்படுவது தொடர்பாக காணொலிக் காட்சி விசாரணையில் ஆஜராகாத உழவர்கரை நகராட்சி ஆணையருக்கு மத்திய தகவல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
 உழவர்கரை நகராட்சி அஜீஸ் நகர் அங்காடி வளாகத்தில் அந்தத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அங்காடிக்குள்
 எம்.எல்.ஏ. அலுவலகம் செயல்படுவது தொடர்பாக கடந்த 8.7.2016-இல் ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பின் தலைவர் ரகுபதி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு அனுப்பினார்.
 நகராட்சி அங்காடியில் இரு கடைகளை எம்.எல்.ஏ. அலுவலகம் அமைக்க ஒதுக்கியது தொடர்பாகவும் அவர் தகவல் கோரியிருந்தார். ஆனால், உழவர்கரை நகராட்சி ஆணையர் ரமேஷ் தகவல் ஏதும் தரவில்லை. இதையடுத்து, மத்திய தகவல் ஆணையத்திடம் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்தும் தகவல் தராத உழவர்கரை நகராட்சி ஆணையர் மீது மத்திய தகவல் ஆணையத்திடம் இரண்டாவது மேல் முறையீடு தாக்கல் செய்தார். அதன்அடிப்படையில், காணொலிக் காட்சி முறையில் ஜனவரி
 10-ஆம் தேதி விசாரணை நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, நகராட்சி ஆணையரை தலைமைச் செயலகத்துக்கு வர நோட்டீஸ் அளிக்கப்பட்டது. ஆனால் அவர் 2-ஆவது முறையும் நகராட்சி ஆணையர் கூட்டத்துக்கு வரவில்லை.
 இதனைத் தொடர்ந்து, மத்திய தகவல் ஆணையர் திவ்யா பிரகாஷ் சின்ஹா உத்தரவுப்படி, துணைப் பதிவாளர் சென் ஜனவரி 12-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவு விவரம்:
 நகராட்சி அங்காடியில் எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பாக விண்ணப்பதாரர் கேட்டுள்ள விவரங்களைத் தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி 15 நாள்களுக்குள் ஆணையர் அளிக்க வேண்டும். அதே நேரத்தில் நகராட்சி ஆணையர், இரண்டாவது மேல் மூறையீடு காணொலிக் காட்சி விசாரணையில் ஆஜராகாதது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி விதி மீறலாகும். எனவே, அதுதொடர்பாக உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?
 ஆணையத்தின் உத்தரவுப்படி, 15 நாள்களுக்குள் தகவலை அளித்தது தொடர்பாகவும், இது தொடர்பான கேள்விகளுக்கும் எழுத்துப்பூர்வமாக பதிலை 30 நாள்களுக்குள் மத்திய தகவல் ஆணையத்துக்கு நகராட்சி ஆணையர் அளிக்க வேண்டும்.
 மேலும், மக்கள் பயன்பாடு அதிகமுள்ள இந்த விவகாரத்தில் தகவல் தராதது முக்கிய குற்றச்சாட்டாக ஆணையர் மீது வைக்கப்படுவதை ஆணையம் உற்றுநோக்குகிறது. இதுதொடர்பான உத்தரவு நகல் தலைமைச் செயலருக்கும் அனுப்பப்படுகிறது. இந்தக் குறிப்புகளை நகராட்சி அலுவலகம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com