ஏடிஎம் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய எதிரிக்கு ஜூலை 26 வரை நீதிமன்றக் காவல்

ஏடிஎம் பண மோசடி வழக்கில் புதன்கிழமை கைதான முக்கிய எதிரி சந்துருஜியை ஜூலை 26-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஏடிஎம் பண மோசடி வழக்கில் புதன்கிழமை கைதான முக்கிய எதிரி சந்துருஜியை ஜூலை 26-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டது.
 புதுவையில் வங்கி வாடிக்கையாளர்களின் கணக்குகளில் இருந்து போலி ஏடிஎம் அட்டைகள் மூலம் பணத்தை மோசடி செய்த வழக்கில் இதுவரை 16 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.
 மேலும், 80 நாள்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்து வந்த முக்கிய எதிரி சந்துருஜியை சென்னை பெசன்ட் நகரில் வைத்து புதுவை சிபிசிஐடி போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
 பின்னர், அவரை புதுச்சேரி அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் புதுவை, தமிழகம் மட்டுமன்றி, அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்வீடன், ஜப்பான் உள்ளிட்ட பல வெளிநாடுகளில் உள்ளவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்தும் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டது தெரிய வந்தது.
 இந்த நிலையில், புதுச்சேரி தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் சந்துருஜி வியாழக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி கிருஷ்ணசாமி சந்துருஜியை ஜூலை 26-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
 இதையடுத்து, சந்துருஜி காலாப்பட்டு மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனிடையே, சந்துருஜியை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸார் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர்.
 இந்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது.
 பாரபட்சமின்றி நடவடிக்கை: முதல்வர் உறுதி
 இதனிடையே, இந்த விஷயம் தொடர்பாக புதுவை சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் நாராயணசாமி, இந்த வழக்கில் யாருக்குத் தொடர்பு இருந்தாலும் பாரபட்சமின்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 தொடர்ந்து பேசிய அவர், "முக்கிய எதிரியான சந்துருஜி கைது செய்யப்பட்டுள்ளார். புதுவை, தமிழகம் மட்டுமன்றி, வெளிநாடுகளில் உள்ளவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பல கோடி ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
 புதுவை போலீஸார், சிபிசிஐடி போலீஸார், சைபர் கிரைம் போலீஸார் மிகப் பெரிய ஊழலைக் கண்டுபிடித்துள்ளனர். அவர்களுக்கு நமது பாராட்டுகள். கைது செய்யப்பட்ட சந்துருஜியை விசாரித்தால்தான் பல உண்மைகள் தெரிய வரும். அதன் மீது பாரபட்சமின்றி, யார் தலையீடும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com