காவல் துறைக்கு புதிதாக 10 ரோந்து வாகனங்கள்: முதல்வர் தகவல்

காவல் துறைக்கு புதிதாக 10 ரோந்து வாகனங்கள் வாங்கப்படும் என்று புதுவை பேரவையில் முதல்வர் வே.நாராயணசாமி அறிவித்தார்.

காவல் துறைக்கு புதிதாக 10 ரோந்து வாகனங்கள் வாங்கப்படும் என்று புதுவை பேரவையில் முதல்வர் வே.நாராயணசாமி அறிவித்தார்.
 பேரவையில் வெள்ளிக்கிழமை பூஜ்ஜிய நேரத்தில் திமுக குழுத் தலைவர் இரா.சிவா பேசியதாவது:
 புதுச்சேரியில் தொடர் திருட்டு, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் கடந்த 3 மாதங்களாக அதிகளவில் அரங்கேறியுள்ளன. கோடை விடுமுறையில் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தவர்களின் வீடுகளை நோட்டமிட்டு குறிவைத்து திருட்டுச் சம்பவங்கள் நடந்தன. முத்தியால்பேட்டை, முதலியார்பேட்டை, நெல்லித்தோப்பு, உருளையன்பேட்டை என நகர்ப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவங்கள் நடைபெற்றன.
 புதுச்சேரியில் சுமார் 25-க்கும் மேற்பட்ட வீடுகளில் திருடர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டினர்.
 தேங்காய்த்திட்டில் அடுத்தடுத்து கோயில்களில் உண்டியல்கள் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டன. இதுபோல, 15-க்கும் மேற்பட்ட கோயில்களில் உண்டியல் திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்றன.நகர்ப் பகுதிகளில் தனியாக நடந்து சென்ற பெண்களிடம் சங்கிலி பறிப்பு, வழிப்பறி போன்ற சம்பவங்களும் நடந்தன. அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களிடமும், வீடு திரும்பும் பெண்களிடமும் வழிப்பறிகள் நடைபெற்றன.
 பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதற்கே அச்சப்படும் சூழ்நிலை உள்ளது.
 இதில் தொடர்புடைய கொள்ளையர்கள் கைது செய்யப்படவில்லை. வழிப்பறி, கொள்ளை, திருட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பொருள்கள் கிடைக்கவில்லை. அரசு இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். கடந்த காலத்தைப் போல, இரவு முழுவதும் காவல் துறையினர் ரோந்து வாகனம் மூலம் கண்காணிப்புப் பணியில் ஈடுபட வேண்டும்.
 முதல்வர் நாராயணசாமி: புதுச்சேரியில் பல பகுதிகளில் தொடர் திருட்டுகள் நடைபெற்றன. காவல் துறையினர் ரோந்துப் பணியை நள்ளிரவு ஒரு மணிக்கு முடிந்த பின்னர், வெளிமாநிலத்தில் இருந்து வரும் சமூக விரோதிகள் நள்ளிரவு 2 மணி முதல் அதிகாலை 4 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் பூட்டியிருக்கும் வீடுகளில் கொள்ளையடித்துச் சென்றனர்.
 கடந்த ஒன்றரை மாதமாக இவ்வாறான திருட்டுச் சம்பவம் குறைந்துள்ளன. முந்தைய ஆட்சியில் திருட்டுச் சம்பவங்கள் குறித்து வழக்குப் பதிவு செய்யவில்லை. ஆனால், தற்போது உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
 நான் மத்திய அமைச்சராக இருந்த காலத்தில் மக்களவைத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து காவல் துறைக்கு 10 ரோந்து வாகனங்களை வாங்கிக் கொடுத்தேன்.
 அதுபோல, தற்போதும் 10 புதிய ரோந்து வாகனங்கள் வாங்கித் தரப்படும். ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்படும்.
 ஜெயமூர்த்தி (காங்கிரஸ்): அரியாங்குப்பம், தேங்காய்த்திட்டு, முருங்கப்பாக்கம் ஆகிய கோயில்களில் உண்டியல்களை உடைத்து திருட்டு நடைபெற்றது. இதில், குற்றவாளிகள் இதுவரை பிடிக்கப்படவில்லை.
 வையாபுரி மணிகண்டன் (அதிமுக கொறடா): முத்தியால்பேட்டையில் 300 பவுன் நகைகள் திருடுபோன சம்பவத்தில் வெளியூரில் இருந்து காரில் வந்த கும்பல் சம்பந்தப்பட்டுள்ளது.
 இரவில் வரும் கார்களை சோதனை செய்தாலே இவ்வாறான திடுட்டைத் தடுக்கலாம். சோலை நகரில் கடந்த 20 நாள்களுக்கு முன் ஒரு வீட்டில் 20 பவுன் நகைகள் திருடு போனது.
 இதுவரை குறித்து வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.
 முதல்வர் நாராயணசாமி: இதுகுறித்து வழக்குப் பதிவு செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com