108 அவசரகால ஊர்தித் திட்டம் தோல்வி அடைந்துவிட்டது: திமுக எம்எல்ஏ

புதுவையில் 108 அவசரகால மருத்துவ ஊர்தித் திட்டம் தோல்வி அடைந்துவிட்டதாக திமுக குழுத் தலைவர் இரா.சிவா புகார் தெரிவித்தார்.

புதுவையில் 108 அவசரகால மருத்துவ ஊர்தித் திட்டம் தோல்வி அடைந்துவிட்டதாக திமுக குழுத் தலைவர் இரா.சிவா புகார் தெரிவித்தார்.
 சட்டப்பேரவையில் அவர் பேசியதாவது: மத்திய சுகாதாரத் துறையின் தேசிய ஊரக சுகாதார இயக்ககம் மூலம் புதுவையில் இயக்கப்படும் 108 அவசரகால ஊர்திகளின் சேவை திருப்திகரமாக இல்லை என்பதை அரசு அறியுமா? 68 ஓட்டுநர்களுக்கு வருங்கால வைப்பு நிதி (இபிஎப்) பிடித்தம் செய்யப்படாததுடன், ஊதியமும் முறையாக வழங்கப்படுவதில்லை.
 ஓட்டுநர்களை நிரந்தர பணியாளர்களாக்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன?
 முதல்வர் நாராயணசாமி: அனைத்து 108 அவசரகால ஊர்திகளும் பொதுமக்களுக்கு சேவை ஆற்றுகின்றன. நிறுவப்பட்டுள்ள ஒரு அழைப்பு நிலையம் மூலம் அவசர ஊர்திகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர்களை 108 அவசர ஊர்தியில் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
 அனைத்து ஓட்டுநர்களுக்கும் கடந்த ஏப்ரல் முதல் வருங்கால வைப்புநிதி பிடித்தம் செய்யப்படுகிறது. அரசு விடுமுறைகள் அனுமதிக்கப்படுகின்றன. அரசால் அங்கீகரிக்கப்பட்ட மதிப்பூதியம் வழங்கப்படுகிறது.
 சிவா: ஓட்டுநர்களுக்கு மாதம்தோறும் ஊதியம் கூட வழங்குவதில்லை. 108-ஐ
 தொடர்பு கொண்டால் தமிழகத்துக்குச் செல்கிறது. அவசர ஊர்தியில் மருத்துவ உதவியாளர்கள் இருப்பதில்லை. அவசர மருத்துவ ஊர்திகள் பழுதடைந்துவிட்டன. இதனால் நோயாளிகளை ஏற்றிவரும்போது பாதியில் நிற்கிறது. 108 அவசர ஊர்தி திட்டமே புதுவையில் தோல்வி அடைந்துவிட்டது.
 முதல்வர் நாராயணசாமி: தேசிய ஊரக சுகாதார இயக்கக திட்டத்தை அமல்படுத்தியபோது மத்திய அரசு நிதி கொடுத்தது. மேலும் இத்திட்டத்தை அமல்படுத்தியபோது தேர்வு செய்யப்பட்டவர்கள் இத்திட்டம் நடைமுறையில் இருக்கும் வரை என்று கூறப்பட்டது. ஆனாலும் அவர்களை படிப்படியாக நிரந்தரம் செய்யும் வகையில் முதல் கட்டமாக மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார் நாராயணசாமி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com