உயர் கல்வி ஆணையம் அமைக்கக் கூடாது: புதுவை முதல்வர்

பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு (யுஜிசி) பதிலாக, உயர் கல்வி ஆணையம் அமைக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவிப்போம் என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி தெரித்தார்.

பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு (யுஜிசி) பதிலாக, உயர் கல்வி ஆணையம் அமைக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவிப்போம் என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி தெரித்தார்.
 புதுவை சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது அதிமுக குழுத் தலைவர் ஆ.அன்பழகன் பேசியதாவது:
 மத்திய அரசால் மாநிலத்தின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்படுகிறது. நீட் தேர்வு மூலம் கல்வியில் மாநில அரசுக்கு இருந்த உரிமையை மத்திய அரசு பறித்துவிட்டது.
 தற்போது, நிர்வாகம் மற்றும் நிதி ஆதாரம் உள்ள பல்கலைக்கழக மானியக் குழுவை கலைத்துவிட்டு உயர் கல்வி ஆணையம் அமைக்க முடிவு செய்துள்ளது.
 இதற்கான வரைவுச் சட்டத்தையும் அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அனுப்பியுள்ளது. யுஜிசியின் நிதி அதிகாரத்தை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு வழங்க இருப்பதாகவும் தெரிய வருகிறது. யுஜிசியை தவிர்த்து வேறு துறைகளுக்கு நிதி ஆதாரத்தை கொடுத்தால் தற்போது வழங்கப்படும் 100 சதவீத நிதி குறைக்கப்பட்டுவிடும். இது புதுவைக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தும்.
 இதை தமிழக அரசு உறுதியாக எதிர்த்து தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. புதுவை அரசும் இதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றார்.
 இதற்குப் பதிலளித்து முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:
 கல்வியில் மத்திய, மாநில அரசுகளுக்கு உரிமை உண்டு. ஆனால், நீட் தேர்வை கொண்டு வந்து மத்திய அரசு மருத்துவ மாணவர் சேர்க்கையில் முழுஅதிகாரத்தையும் தன் பக்கம் இழுத்துக் கொண்டது. இதேபோல, படிப்படியாக மாநில அரசுகளின் அதிகாரத்தை குறைத்து தனது அதிகாரத்தை வலுப்படுத்தும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளது. யுஜிசி என்பது தன்னாட்சி பெற்ற அமைப்பு. இதில் மத்திய அரசு நேரடியாக தலையிட முடியாது. இந்த அமைப்புக்கு நிதி ஆதாரமும் உள்ளது. இதனால், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளை யுஜிசி நேரடியாக பார்வையிட்டு 100 சதவீத மானியத்தை வழங்கி வருகிறது. மத்திய அரசு தற்போது உயர் கல்வி ஆணையம் அமைக்க ஒரு உத்தேச சட்ட முன்வரைவை கொண்டு வந்துள்ளது. இதன்மூலம் பல்கலைக்கழங்கள், கல்லூரிகளுக்கு நிதி வழங்கும் ஆதாரம் மத்திய அரசின் கைக்குச் செல்லும்.
 இதனால் நிதி வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படும். இதுதொடர்பான கடிதம் மத்திய அரசிடம் இருந்து புதுவை அரசுக்கு வந்துள்ளது.
 இதற்கு விளக்கம் அளிக்க ஜூலை 20-ஆம் தேதி வரை அவகாசம் உள்ளது. எனவே, உயர் கல்வி ஆணையம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து கடிதம் அனுப்புவோம் என்றார் நாராயணசாமி.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com