உழவர்கரை நகராட்சி தொகுதிகளுக்கு கூடுதல் நிதியுதவி: அமைச்சர் நமச்சிவாயம்

உழவர்கரை நகராட்சிக்கு உள்பட்ட தொகுதிகளுக்கு கூடுதலாக ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அமைச்சர் ஆ.நமச்சிவாயம் அறிவித்தார்.

உழவர்கரை நகராட்சிக்கு உள்பட்ட தொகுதிகளுக்கு கூடுதலாக ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அமைச்சர் ஆ.நமச்சிவாயம் அறிவித்தார்.
 சட்டப்பேரவையில் பேசிய அரியாங்குப்பம் தொகுதி உறுப்பினர் ஜெயமூர்த்தி, அரியாங்குப்பம் தொகுதிக்கு உள்பட்ட தேங்காய்த்திட்டில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன? பணிகளின் மதிப்பீடு என்ன? எப்பொழுது தொடங்கப்படும் என்றார்.
 அமைச்சர் நமச்சிவாயம்: பொலிவுறு நகர மின்சார மீட்டர், வைபை வசதியுடன் பொலிவுறு திட்ட மின்கம்பம், பொலிவுறு தெருவிளக்கு, பொலிவுறு குடிநீர் மீட்டர், 24 மணிநேர குடிநீர் வழங்கும் திட்டம் என்ற அளவில் வழங்க உத்தேசித்துள்ள திட்டத்தை பான் சிட்டி அளவில் ஏபிடி ஏரியா முழுவதும் (தேங்காய்த்திட்டு பகுதி உள்பட) செயல்படுத்துதல், செம்மையான போக்குவரத்து மேலாண்மை, ஆவணங்களை கணினி மயமாக்குதல் ஆகியவை செய்யப்பட உள்ளன.
 பணிகளின் திட்ட மதிப்பீடு செய்ய திட்ட ஆலோசனை வல்லுநர் தெரிவு செய்யும் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது. தெரிவு செய்தவுடன் பிஎம்சி மூலம் பணி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பணிகள் தெரிவு செய்யப்படும். இந்த நிதியாண்டில் பணிகள் தொடங்கப்படும்.
 ஆ.அன்பழகன்: நேதாஜி நகர் வார்டில் தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகம் பேர் வசிக்கின்றனர். அதை விட்டுவிட்டு, அடுத்துள்ள தேங்காய்த்திட்டு வார்டை எடுத்தது ஏன்?. நேதாஜி நகர் வார்டையும் பொலிவுறு நகர திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
 பேரவைத் தலைவர்: பொலிவுறு நகர திட்டம் புதுச்சேரி நகராட்சிக்கு மட்டுமா? உழவர்கரை நகராட்சிக்கு கிடையாதா?
 அமைச்சர் நமச்சிவாயம்: ஆலோசனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். புதுச்சேரி நகராட்சிக்கு மட்டும்தான்.
 எம்.என்.ஆர்.பாலன் (காங்.): பொலிவுறு நகர திட்டத்தில் உழவர்கரை நகராட்சி இடம் பெறவில்லை. கிராமப்புற தொகுதிகளுக்கு ரூ.50 லட்சம் தொகுதி மேம்பாட்டு நிதி கூடுதலாக தருவதைப்போல், உழவர்கரை நகராட்சியில் உள்ள தொகுதிகளுக்கும் வழங்க வேண்டும்.
 அமைச்சர் நமச்சிவாயம்: உழவர்கரை நகராட்சியில் உள்ள தொகுதிகளுக்கு கூடுதலாக ரூ.50 லட்சம் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கித் தரப்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com