கண்காணிப்பு கேமராக்கள் ஒரு மாதத்தில் செயல்பாட்டுக்கு வரும்: முதல்வர் உறுதி

புதுச்சேரி நகரப் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் ஒரு மாதத்துக்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று முதல்வர் வே.நாராயணசாமி உறுதி அளித்தார்.

புதுச்சேரி நகரப் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் ஒரு மாதத்துக்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று முதல்வர் வே.நாராயணசாமி உறுதி அளித்தார்.
 சட்டப்பேரவையில் பேசிய அரசுக் கொறடா ஆர். அனந்தராமன், தேசிய நெடுஞ்சாலை, முக்கிய சந்திப்புகள், பிரதான சாலைகள், வணிக வளாகங்கள், மாநிலத்தின் எல்லை நுழைவு வாயில்கள், பொது இடங்களில் கோயில்கள் மற்றும் காவல் நிலையங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த அரசு நடவடிக்கை எடுக்குமா என்றார்.
 முதல்வர் நாராயணசாமி: புதுச்சேரியில் பல்வேறு முக்கிய சந்திப்புகளில் 103 கண்காணிப்புக் கேமராக்களை காவல்துறை நிறுவியுள்ளது. இது தவிர நகரத்தில் பல பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள், பொது இடங்கள் போன்ற இடங்களில் பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஒத்துழைப்போடு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
 அனந்தராமன்: 103 கேமராக்களில் எத்தனை இயங்குகின்றன.
 முதல்வர் நாராயணசாமி: 85 கேமராக்கள் இயங்குகின்றன. முன்பு வயர்லெஸ்ஸில் கேமராக்கள் இணைக்கப்பட்டு இருந்தன. தற்போது அவைகளை ஆப்டிக் பைபர் கேபிள் மூலம் இணைக்க திட்டமிட்டு பணிகள் நடந்து வருகின்றன. ஒரு மாதத்தில் பணி முடிந்தவுடன் அனைத்தும் செயல்படும்.
 பேரவை துணைத் தலைவர் வே.பொ.சிவக்கொழுந்து: எனது தொகுதி தமிழகத்தை ஒட்டி இருப்பதால், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் குற்றம் செய்துவிட்டு இங்கு வந்து விடுகின்றனர். எனவே எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.
 வையாபுரி மணிகண்டன்: பெரும்பாலான கண்காணிப்பு கேமராக்களில் காட்சிகள் பதிவு செய்யப்படுவதில்லை. அவைகளை கண்காணிக்கும் பணி தனியாரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், குற்றவாளிகளை அடையாளம் காண பதிவுகள் தேவை என்று போலீஸார் தொடர்பு கொண்டால் கூட ஒருநாள் கழித்தே வருகின்றனர். இதனால் திருடர்கள் தப்பிவிடுகின்றனர். இந்நிலை மாற்றப்பட வேண்டும்.
 முதல்வர் நாராயணசாமி: காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பொலிவுறு நகரத் திட்டம் அமலுக்கு வரும்போது நகரப் பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கும் என்றார் நாராயணசாமி.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com