கால்பந்துப் போட்டியில் வெற்றி: பிரான்ஸ் அணிக்கு புதுவை ஆளுநர், முதல்வர் வாழ்த்து

கால்பந்துப் போட்டியில் உலக கோப்பையை வென்ற பிரான்ஸ் அணிக்கு புதுவை ஆளுநர் கிரண் பேடி, முதல்வர் வே.நாராயணசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கால்பந்துப் போட்டியில் உலக கோப்பையை வென்ற பிரான்ஸ் அணிக்கு புதுவை ஆளுநர் கிரண் பேடி, முதல்வர் வே.நாராயணசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
 ரஷ்யாவில் நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் பிரான்ஸ், குரோஷியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
 புதுவை பிரெஞ்சு பாரம்பரியம் கொண்டது என்பதாலும், இங்கு பிரான்ஸ் குடிமக்கள் வசித்து வருவதாலும், இந்தப் போட்டியை சுற்றுலாப் பயணிகள் காணும் வகையில், சுற்றுலாத்துறை சார்பில் கடற்கரை லே கபே உணவகத்தின் மாடியில் பிரம்மாண்ட திரை அமைக்கப்பட்டு இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு ஒளிபரப்பப்பட்டது.
 இந்த ஆட்டத்தை முதல்வர் நாராயணசாமி, விளையாட்டுத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ், வளர்ச்சி ஆணையர் அன்பரசு, ஐஜி சுரேந்தரசிங் யாதவ் மற்றும் வெளிநாடு, வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் பொதுமக்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர்.
 பிரான்ஸ் அணி கோல் அடிக்கும்போது ஆரவாரம் எழுப்பியும், குரோஷியா அணி கோல் அடிக்கும்போது அமைதியாகவும் இருந்தனர். போட்டியில் பிரான்ஸ் வெற்றி பெற்றதை அடுத்து அவர்கள் உற்சாகக் குரல் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
 பிரான்ஸ் நாட்டு கொடியை தலையில் போர்த்தியபடியும், கைகளில் பிடித்தபடியும் 100-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் போட்டியை கண்டுகளித்தனர்.
 போட்டி முடிந்த பிறகு முதல்வர் நாராயணசாமி அளித்த பேட்டி:
 புதுவை பிரெஞ்சு காலனியின் கீழ் இருந்த பகுதியாகும். பிரான்ஸுக்கும் புதுவைக்கும் தொடர்பு உண்டு. புதுவையைச் சேர்ந்தவர்கள் நிறைய பேர் பிரான்ஸில் வேலை செய்கின்றனர். இந்த நிலையில், உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் பிரான்ஸ் வெற்றி பெறும் என்று நம்பிக்கையுடன் கூறியிருந்தேன்.
 அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. பிரான்ஸ் கால்பந்து அணி வீரர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். பிரான்ஸ் வெற்றி பெற்றது, புதுவை மாநில மக்களுக்கு அவர்களே வெற்றி பெற்றது போல் உள்ளது என்றார்.
 பிரான்ஸ் வெற்றி பெற்றது குறித்து, ஆளுநர் கிரண் பேடி தனது கட்செவி அஞ்சலில், உலக கோப்பை போட்டியில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. ஒரு காலத்தில் ஒன்றுபட்ட பிரெஞ்சு நாட்டில் இருந்தோம். இப்போதும் புதுவைக்கும், பிரான்ஸுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
 புதுவை சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நாம் வெற்றி பெற்றுள்ளோம். இதே உற்சாகத்தைப் பயன்படுத்தி புதுவையில் கால்பந்து அணிகளை உருவாக்க வேண்டும். அடிக்கடி போட்டிகள் நடத்த வேண்டும். சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணிக்கு வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com