சட்டப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்க புதுவை நியமன எம்எல்ஏக்களுக்கு அனுமதி மறுப்பு

புதுவை பாஜக நியமன எம்எல்ஏக்கள் 3 பேரும் சட்டப் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்க பேரவைத் தலைவர் அனுமதி மறுத்ததையடுத்து, அவர்கள் வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.

புதுவை பாஜக நியமன எம்எல்ஏக்கள் 3 பேரும் சட்டப் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்க பேரவைத் தலைவர் அனுமதி மறுத்ததையடுத்து, அவர்கள் வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.
 மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நியமன எம்.எல்.ஏ.க்களின் நியமனம் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடைவிதிக்கக் கோரி காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமிநாராயணன், திமுக பிரமுகர் தனலட்சுமி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
 அந்த மனுவின் மீதான விசாரணை கடந்த 13-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எந்தத் தடையும் விதிக்கவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்ததால் நியமன எம்.எல்.ஏ.க்கள் பேரவைக்குள் செல்லலாம். அவர்களை யாராவது தடுத்தால் அது நீதிமன்ற அவமதிப்பாகும் என துணைநிலை ஆளுநர் கிரண் பேடி கருத்து தெரிவித்திருந்தார்.
 இதையடுத்து, நியமன எம்.எல்.ஏ.க்கள் வி.சாமிநாதன், கே.ஜி.சங்கர், எஸ்.செல்வகணபதி ஆகியோர் கடந்த 14-ஆம் தேதி பேரவைச் செயலர் வின்சென்ட் ராயரை சந்தித்து தங்களை பேரவைக்குள் அனுமதிக்கக் கோரி கடிதம் அளித்தனர்.
 அதேநேரத்தில், அவர்களை பேரவைக்குள் அனுமதிக்கக் கூடாது என காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமிநாராயணன்
 பேரவைச் செயலரிடம் கடிதம் வாயிலாக கேட்டுக்கொண்டார்.
 இந்த நிலையில், நியமன எம்.எல்.ஏ.க்கள் பிரச்னை மீண்டும் எழுந்ததைத் தொடர்ந்து, புதுவை சட்டப்பேரவையில் வழக்கத்தை விட திங்கள்கிழமை கூடுதலாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காலை 9 மணியில் இருந்து உறுப்பினர்கள் ஒவ்வொருவராக வரத்தொடங்கினர்.
 சரியாக 9.35 மணிக்கு 3 கார்களில் நியமன எம்.எல்.ஏ.க்களும் பேரவை நோக்கி வந்தனர். அப்போது, பேரவையின் நுழைவு வாயில் இழுத்து மூடப்பட்டது. 3 பேரும் தங்களை உள்ளே அனுதிக்க வலியுறுத்தினர். ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களை மட்டுமே பேரவைக்குள் அனுமதிக்க பேரவைத் தலைவர் அனுமதி அளித்துள்ளதாக சபைக் காவலர்கள் தெரிவித்தனர்.
 உடனே சாமிநாதன் வாய்மொழி உத்தரவு செல்லாது என்றும் எழுத்துப்பூர்வ உத்தரவை காட்ட வேண்டும். இல்லையென்றால் தங்களை உள்ளே அனுமதிக்க வேண்டும் என்றும் கூறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
 இதுகுறித்து நியமன எம்.எல்.ஏ. சாமிநாதன் கூறியதாவது:
 மத்திய அரசு எங்களை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்தது. உயர் நீதிமன்றமும் எங்களது நியமனம் செல்லும் என்று கூறியது. ஆனால், இந்த உத்தரவை பேரவைத் தலைவர் மதிக்கவில்லை. இப்போது மட்டுமல்ல காங்கிரஸார் எப்போதும் நீதிமன்றத் தீர்ப்பை மதித்ததில்லை.
 பேரவைத் தலைவர் நேரடியாக வந்து எங்களுக்கு உள்ளே செல்ல அனுமதி இல்லை எனக் கூற வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும் என்றார்.
 2 மணி நேரத்துக்கும் மேலாக சட்டப்பேரவை நுழைவு வாயிலில் காத்திருந்த 3 பேரும், பின்னர் தங்களது கார்களில் புறப்பட்டுச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com