தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஒதுக்கீடு பெற சிறப்பு பேரவை கூட்டப்படும்

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத அரசு ஒதுக்கீடு பெற சிறப்பு சட்டப்பேரவையைக் கூட்டி விவாதிக்கப்படும் என்று பேரவைத் தலைவர் வெ.வைத்திலிங்கம் தெரிவித்தார்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத அரசு ஒதுக்கீடு பெற சிறப்பு சட்டப்பேரவையைக் கூட்டி விவாதிக்கப்படும் என்று பேரவைத் தலைவர் வெ.வைத்திலிங்கம் தெரிவித்தார்.
 புதுவை மாநிலத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் இளநிலை, முதுநிலை படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களைப் பெறுவதில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் குறித்து, சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்து அதிமுக குழுத் தலைவர் தலைவர் ஆ.அன்பழகன் பேசியதாவது:
 புதுவையில் இயங்கும் 4 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 35 சதவீத இடங்களையும், 3 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களையும் பெற சட்டம் கொண்டு வர வேண்டும். மேலும், சென்டாக் மூலம் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு கட்டணக் குழு அறிவித்த தொகையைவிட, கல்லூரிகள் அதிகமாக கட்டணத்தை வசூலிக்கின்றன. இதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
 எம்.என்.ஆர்.பாலன் (காங்கிரஸ்): புதுவையில் உள்ள நிகர்நிலை பல்கலைக்கழகங்களால் உள்ளூர் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. அப்படி இருக்கையில், அவர்களுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்குவதன் அவசியம் என்ன? எனவே, அவர்களுக்கான மின் கட்டணம், சொத்து வரி, தண்ணீர் வரியை உயர்த்த வேண்டும். மேலும், நிகர்நிலைப் பல்கலையை மாநில அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவர சட்டத்தை கொண்டுவர வேண்டும்.
 அரசுக் கொறடா ஆர். அனந்தராமன்: மருத்துவக் கல்லூரிகளும் நிகர்நிலை பல்கலைக்கழங்களாக மாறுவதால், அதனை கட்டுப்படுத்துவதற்கான எந்தவொரு சட்டமும் நம்மிடம் இல்லை. இதே நிலை தொடர்ந்தால் புதுவை மாணவர்களுக்கு மருத்துவம் பயில இடமில்லாமல் போய்விடும். எனவே, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை பெற அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும்.
 க.லட்சுமிநாராயணன்: புதுவை மாநிலத்தில் உள்ள 7 தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் உரிய இடங்கள் கிடைப்பதில்லை. சுயநிதிக் கல்லூரிகள் தொடங்கும்போது 50 சதவீத இடங்கள் தருவதாகக் கூறி தடையில்லா சான்று பெறுகின்றனர். பிறகு இடங்களை தர மறுக்கின்றனர்.
 முதல்வர் நாராயணசாமி: ஆட்சிக்கு வந்த பிறகு மத்திய அரசுக்கு 2 கடிதங்கள் எழுதியுள்ளோம். அந்தக் கடிதத்தில், சாதிவாரியாக கல்லூரிகளில் இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தால், மீதியுள்ள இடங்களை அந்த சமுதாயத்தை சேர்ந்த பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டும் என்றேன். இது தொடர்பாக எந்தவொரு பதிலும் வரவில்லை.
 நிகர்நிலை பல்கலைக்கழங்களில் இருந்து முதலாண்டு 147 இடங்கள் கொடுத்திருந்தனர். அடுத்த ஆண்டு இடங்களை கொடுக்கவில்லை. அதனை வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தேன். அதற்கும் மத்திய அரசிடமிருந்து பதில் வரவில்லை. எனவே, நிகர்நிலை, சிறுபான்மை, சுயநிதி என எந்த மருத்துவக் கல்லூரியாக இருந்தாலும், அங்கிருந்து இடங்களை பெற சட்ட வரையறை தயார் செய்து குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று நடைமுறைப்படுத்த முடியும்.
 மருத்துவ கல்விக் கட்டணமாக ரூ.16 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக கட்டணக் குழு தலைவரியிடம் பேசி கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
 தனியார் பல்கலைக்கழகம் அமைக்க ஒரு சட்டவரையறை தயார் செய்துள்ளோம். இதுவரை எந்த தனியார் கல்லூரிக்கும் அனுமதி கொடுக்கவில்லை. தனியார் பல்கலைக்கழகங்கள் வரும்போது நம்முடைய சட்ட விதிகளுக்கு உள்பட்டுதான் அவர்கள் செயல்பட முடியும். எவ்வளவோ முறை நிகர்நிலைப் பல்கலைக்கழக நிர்வாகத்தை அழைத்துப் பேசினாலும், நீதிமன்றம் சென்று உத்தரவு பெறுகின்றனர். இதற்காக அரசு நடவடிக்கை எடுக்கும்.
 அன்பழகன் (அதிமுக): ஆண்டுதோறும் இதே கோரிக்கை குறித்து பேசுகிறோம். புதுவை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை சம்பந்தமாக உரிய சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்ற எங்களுடைய கோரிக்கையை முதல்வர் நிராகரித்துள்ளார்.
 இதனைக் கண்டித்து அதிமுக வெளிநடப்பு செய்கிறது என்று கூறி வெளியேறினார்.
 திமுக குழுத் தலைவர் சிவா: இந்தாண்டு நிகர்நிலைப் பல்கலைக்கழங்களில் இடங்களை பெற முதல்வரும், சுகாதாரத்துறை அமைச்சரும் ஆலோசனை நடத்தினீர்களா? ஏற்கெனவே கொடுத்த இடங்களைக் கூட பெறவில்லை.
 முதல்வர் நாராயணசாமி:
 நிகர்நிலை பல்கலைக்கழத்தில் நாம் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதனால், அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் வரவில்லை.
 பேரவைத் தலைவர் வைத்திலிங்கம்: அவையில் 2 பிரச்னைகள் பேசப்படுகிறது. கல்விக் கட்டண பிரச்னையை பேசி தீர்ப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார். 2-ஆவது அவசர சட்டத்தை கொண்டு வர நமக்கு அதிகாரம் உள்ளதா? என்று முதல்வர் பார்க்கிறார். கால அவகாசம் கொடுக்க வேண்டும். சட்டவரையறை கொண்டுவந்து சட்டத்தை கொண்டுவர முயற்சி எடுப்பார்.
 சிவா : சட்டப்பேரவை இன்றோ, நாளையே முடிந்து விடும். எனவே, பேரவைத் தலைவர் ஒரு உறுதிமொழி தர வேண்டும்.
 வைத்திலிங்கம்: சிறப்பு சட்டப்பேரவையைக் கூட்டி இந்த சட்டத்தை நிறைவேற்றுவோம் என்றார்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com