புதுவைக்கு முழு அதிகாரம் பெற 30 எம்எல்ஏக்களுடன் தில்லி செல்ல முடிவு

புதுவைக்கு முழு அதிகாரம் பெற பேரவையை ஒத்திவைத்துவிட்டு 30 எம்.எல்.ஏ.க்களுடன் புதுதில்லி சென்று பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களை

புதுவைக்கு முழு அதிகாரம் பெற பேரவையை ஒத்திவைத்துவிட்டு 30 எம்.எல்.ஏ.க்களுடன் புதுதில்லி சென்று பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களை சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.
 சட்டப்பேரவையில் திங்கள்கிழமை அதிமுக குழுத் தலைவர் ஆ.அன்பழகன் பேசியதாவது:
 தமிழ் தெரியாத அதிகாரிகளால் மக்கள் சிரமப்படுகின்றனர். ஏற்கெனவே இருந்த மாவட்ட ஆட்சியருக்கு தமிழ் தெரியாததால், பொதுமக்களின் புகார்கள் குறித்து அவருக்கு தெரியாமல் இருந்தது. தற்போது, புதிதாக பொறுப்பேற்றற மாவட்ட ஆட்சியருக்கும் தமிழ் தெரியாது.
 தமிழ் தெரிந்த ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்கக் கூட அரசுக்கு அதிகாரம் இல்லையா?
 திமுக குழுத் தலைவர் இரா. சிவா: முதல்வருக்கு ஹிந்தி, ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட மொழிகள் தெரியும். அதனால் அவருக்கு அதிகாரிகள் பேசுவது புரியும். அவர் வேண்டுமானால் வேறு மொழி தெரிந்த அதிகாரிகளை வைத்துக் கொள்ளலாம்.
 அமைச்சர் கந்தசாமி: அனைத்துக் கட்சியினரும் தில்லி வருவதாக கூறியுள்ளனர். இன்னும் ஏன் தாமதிக்கிறீர்கள். சட்டப்
 பேரவையை தள்ளி வைத்து தில்லிக்குச் செல்வோம்.
 நமது மாநில உரிமையை நிலை நாட்டுவோம்.
 என்.ஆர். காங்கிரஸ், திமுக , அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வருவதாக கூறியிருக்கும்போது முதல்வர் ஏன் அமைதிகாக்கிறார்.
 ஜெயபால் (என்ஆர் காங்கிரஸ்): மாநில தகுதிக்காகவும், மாநில உரிமைக்காகவும் எப்போது தில்லி அழைத்தாலும் நாங்கள் வரத் தயாராக இருக்கிறோம்.
 முதல்வர் நாராயணசாமி: புதுவை மாநிலத்தில் தனி அதிகாரம் இல்லாத நிலையில் மாநில மக்களுக்கு, மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு மக்களின் எண்ணங்களை நிறைவேற்ற சிரமப்பட வேண்டிய நிலையில் உள்ளது.
 ஜல்லிக்கட்டு சட்டத்தை நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பினோம். அவர் கையெழுத்து போட்டு அனுப்பினார். அந்தச் சட்டத்தை நிறைவேற்றி தில்லிக்கு அனுப்பினோம். அது இன்னும் நமக்கு வந்து சேரவில்லை.
 குடியரசுத் தலைவர் அனுமதி இல்லாமல், நம்மால் சட்டத்தை நிறைவேற்ற முடியாது. ஆனால், மாநிலங்களுக்கு சட்டத்தை நிறைவேற்ற அனுமதி உண்டு. நிலம், நிர்வாகம், நிதி சம்பந்தமாக நமக்கு அதிகாரம் இருந்தும் கூட அதற்கு முட்டுக்கட்டை உள்ளது. தில்லியில் உள்ள நிலை வேறு, புதுவை உள்ள நிலை வேறு.
 இந்திய அரசியலமைப்பு சட்டம் 240-ஆவது பிரிவில் சட்டப்பேரவை அமைவதற்கு முன்பாக அமைதி, சிறப்பான நிர்வாகம் உள்ளிட்ட 3 துறையில் நேரடியாக தலையிட குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது. சட்டப்பேரவை அமைந்து முதல்கூட்டம் நடந்துவிட்டால் முழு அதிகாரமும் சட்டப்பேரவைக்கு வந்துவிடும். மாவட்ட ஆட்சியர் சம்பந்தமாக பேசும்போது தமிழ் தெரிந்தவர்களை நியமிக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். சந்தர்ப்ப சூழ்நிலையால் அதனை செய்ய முடியவில்லை.
 நம்முடைய சட்டப்பேரவைக்கு முழு அதிகாரம் தேவை. திட்டங்களை நிறைவேற்ற முழு அதிகாரம் படை த்த ஆட்சியாளர்கள் இங்கு இருக்க வேண்டும். அதற்காக எம்எல்ஏக்களின் கோரிக்கையை ஏற்று, அனைவரையும் தில்லிக்கு அழைத்துச் சென்று பிரதமர், உள்துறை அமைச்சரை சந்திக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
 மேலும், அனைத்துக் கட்சிகளின் மக்களவை, மாநிலங்களவை குழுத் தலைவர்களையும் சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
 அன்பழகன் (அதிமுக): தற்போது நடைபெறும் பேரவைக்கூட்டத் தொடரை நிறுத்திவிட்டு சென்றால்தான் அதற்கான பலன் கிடைக்கும்.
 முதல்வர் நாராயணசாமி: 2 நாள்களில் அனைத்துத் துறை அலுவல்களையும் முடித்துவிட்டு வெள்ளிக்கிழமை தில்லி செல்ல ஏற்பாடு செய்யப்படும் என்றார். இதற்கு அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் மேசையை தட்டி ஆதரவு தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com