முடங்கியது சுண்ணாம்பாறு படகு குழாம்: பேச்சுவார்த்தைக்கு முன்வருமா புதுவை அரசு?; சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

புதுச்சேரி சுண்ணாம்பாறு படகு குழாம் 8-ஆவது நாளாக முடங்கியதால் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
முடங்கியது சுண்ணாம்பாறு படகு குழாம்: பேச்சுவார்த்தைக்கு முன்வருமா புதுவை அரசு?; சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

புதுச்சேரி சுண்ணாம்பாறு படகு குழாம் 8-ஆவது நாளாக முடங்கியதால் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே, இந்தப் பிரச்னையில் மாநில அரசு தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
 புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் புதுச்சேரியிலிருந்து கடலூர் சாலையில் 7 கி. மீ. தொலைவில் அரியாங்குப்பம் அருகே நோணாங்குப்பத்தில் சுண்ணாம்பாறு படகு குழாம் 1991-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இது மாநில சுற்றுலாத் துறையின் கீழ் உள்ள சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
 சுமார் 5 ஏக்கரில் அமைந்துள்ள இந்தப் படகு குழாம், புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு முக்கிய பொழுதுபோக்கு இடமாக இருந்து வருகிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நுழைவுக் கட்டணமாக ரூ.13, படகு சவாரி கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும். படகு குழாமில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள பாரடைஸ் கடற்கரைக்கு அழைத்துச் செல்வார்கள். அங்கு கடற்கரையில் போதுமான நேரம் பொழுதை கழித்துவிட்டு மீண்டும் படகில் ஏறி குழாமுக்கு வரலாம்.
 உணவு விடுதிகள், குளிக்கும் வசதிகள் அங்கு உள்ளன. இதனால் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் ரம்மியமான சுற்றுலாத்தலமாக இது இருந்து வருகிறது.
 சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக மொத்தம் 20 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதை இயக்க 14 படகு ஓட்டிகளும், 30 சுற்றுலா பாதுகாவலர்களும் உள்ளனர். படகு ஓட்டிகளுக்கு அரசு ஊதியமும், சுற்றுலா பாதுகாவலர்களுக்கு தொகுப்பு ஊதியமும் வழங்கப்படுகிறது. இந்த படகு குழாம் மூலம் ஒரு மாதத்துக்கு ரூ.1 கோடி வருவாய் கிடைக்கிறது. படகு குழாம் 60 முதல் 70 சதவீத லாபத்தில் இயங்கி வருகிறது.
 லாபத்தில் இயங்கி வரும் இந்த படகு குழாமுக்கு மூடுவிழா நடத்தும் வகையில் புதுவை அரசு இதே பகுதியில் சுமார் 1 கி.மீ. தொலைவில் தனியார் படகுத் துறை அமைக்க அனுமதி அளித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழக ஊழியர்கள் கடந்த 8 நாள்களாக தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 இதனால், படகு குழாம் மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ் இயங்கும் உணவகங்கள், அலுவலகங்கள் 8 நாள்களாக இயங்கவில்லை. படகு குழாம் இயங்காததால் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். எனவே, புதுவை அரசு இந்தப் பிரச்னையில் தலையிட்டு சுற்றுலா வளர்ச்சிக் கழக ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
 இது குறித்து புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழக அனைத்து ஊழியர் சங்கங்களின் கூட்டு போராட்டக் குழுத் தலைவர் இரா.கஜபதி கூறியதாவது:
 புதுச்சேரி சுண்ணாம்பாறு படகு குழாமில் ஆண்டு முழுவதும் தண்ணீர் இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகின்றனர்.
 ஆனால், ஓராண்டுக்கு முன்பு இந்த குழாமில் இருந்து 1 கி.மீ. தொலைவில் விதிகளை மீறி தனியாருக்கு படகு துறை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அங்கு படகுத் துறைக்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தி, கடந்த ஏப்.27-ம் தேதி தனியார் படகுத் துறை திறக்கப்பட்டது.
 இந்தத் தனியார் படகுத் துறையினர் அவர்களின் பகுதியில் ஆற்றை ஆழப்படுத்தி உள்ளனர். இதனால் அரசு படகு குழாம் பகுதியில் நீர்மட்டம் குறைந்து படகு ஓட்ட முடியாத நிலை எதிர்காலத்தில் உருவாகும். இதன் மூலம் விரைவில் சுண்ணாம்பாறு படகு குழாமுக்கு மூடுவிழா நடத்தும் நிலை உருவாகும்.
 இந்த படகு குழாமில் இருந்து வரும் வருவாயை வைத்து தான் ஒட்டுமொத்த சுற்றுலா வளர்ச்சிக் கழக ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. படகுக் குழாம் மூடப்பட்டால் 250 ஊழியர்கள் மற்றும் 100 சுற்றுலா பாதுகாவலர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும்.
 அரசு படகு குழாம் மூடப்பட்டால் தனியார் படகுத் துறையில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே, சுற்றுலாப் பயணிகள், சுற்றுலா வளர்ச்சிக் கழக ஊழியர்கள் ஆகியோரின் நலனை கருத்தில்கொண்டு கடந்த 8 நாள்களாக தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
 கடந்த 8 நாள்களாக நடந்த போராட்டம் காரணமாக புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய அனைத்துப் பகுதி உணவகங்கள், படகு குழாம்கள் முடங்கிக் கிடப்பதால் அரசுக்கு தினமும் ரூ.30 லட்சம் என ரூ.2.4 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
 எனவே, புதுவை ஆளுநர், முதல்வர் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் இந்தப் பிரச்னையில் தலையிட்டு ஊழியர் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும் என்றார் கஜபதி.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com