பிறப்பு, இறப்பின் பொருள் உணர்ந்தால் ஞானியாகலாம்: இலங்கை ஜெயராஜ்

பிறப்பு, இறப்பு ஆகியவற்றின் பொருளை உணர்ந்தால் தத்துவ ஞானியாக மாறலாம் என்று ஆன்மிகச் சொற்பொழிவாளர் இலங்கை ஜெயராஜ் தெரிவித்தார்.

பிறப்பு, இறப்பு ஆகியவற்றின் பொருளை உணர்ந்தால் தத்துவ ஞானியாக மாறலாம் என்று ஆன்மிகச் சொற்பொழிவாளர் இலங்கை ஜெயராஜ் தெரிவித்தார்.
புதுச்சேரி கம்பன் கழகத்தின் 53-ஆம் ஆண்டு கம்பன் விழா மே 11-ஆம் தேதி தொடங்கி ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது. விழாவில் பாவலர் மணி, சித்தன் அறக்கட்டளை சார்பில் சிந்தனை அரங்கம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த ஆன்மிகச் சொற்பொழிவாளர் இலங்கை ஜெயராஜ் பேசியதாவது: மனிதனுக்கு கிடைத்த சிறந்த அடையாளம் பேச்சு. கம்பன் சொல்லின் செல்வன் பட்டத்தை அனுமனுக்கு கொடுத்தான். திருவள்ளுவர் இல்லறத்தில் இன்சொல்லும், துறவறத்தில் சத்தியமும், அரசியலில் சொல்வன்மையும், காதலில் பொய்யும் பேச வேண்டும் என நான்கு விதமான பேச்சு பற்றிக் கூறியுள்ளார்.
இன்சொல் பேசுபவர்களிடம் மக்கள் சூழ்ந்து இருப்பார்கள். நல்ல உறவு வேண்டும் என நினைப்பவர்கள் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும் அல்லது இனிய சொற்களைத் தேர்வு செய்து பேச வேண்டும். துறவி சத்தியத்தைப் பேச வேண்டும். தற்போது பல துறவிகள் சத்தியத்தைப் பேசுவதில்லை.
சொற்களால் காரியம் சாதிக்கும் ஆற்றல் கொண்டவர்களாக அரசியல்வாதிகள் இருக்க வேண்டும். காதலில் பொய் பேச வேண்டும். காதலியின் அழகை வர்ணித்துப் பாராட்ட வேண்டும். அப்போதுதான் காதல் வளரும். அங்கு சத்தியத்தைப் பேசினால் காதல் முறிந்துவிடும். அனுமனிடம் இந்த நான்கு பேச்சுத் திறமையும் இருந்தது.
அதேபோல தூது இரண்டு வகை. ஒன்று தலைவன் கூறியதை அப்படியே கூறுவது. இன்னொன்று இதைச் சொன்னால் சிறப்பு என தானே பகுத்தறிந்து கூறுவது. அனுமன் சீதையை சந்தித்த போது, குறைவான சொற்களைப் பயன்படுத்தி, நிறைவாகப் பேசினான். அனுமன் கொடுத்த கணையாழியை சீதை நெஞ்சிலே வைத்துக் கொண்டதைப் பார்த்தவுடன் ராமனின் கண், தோள், இடை ஆகியவற்றை வர்ணித்து பேசினான்.
பிறப்பு, இறப்பு ஆகிய இரண்டு சொற்களுக்குமான பொருளை உணர்ந்துவிட்டால் தத்துவ ஞானியாக மாறிவிடலாம். நான் யார்? ஏன் பிறந்தேன்? என்னுடைய வலிமை என்ன? என்பதை அறிய வேண்டும்.
உலகில் வாழ்வதுதான் மெய் வாழ்க்கை என பொய்யாக நினைத்து இறப்பைச் சந்திக்க அஞ்சுகிறோம். மரணம் உறக்கம் போன்றதுதான், அதைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. மரணம் ஏன் படைக்கப்பட்டது என்றால், ஆன்மாவுக்கு ஓய்வு கொடுப்பதற்காகத்தான். புல், பூண்டு, மரம், பாம்பு, மனிதன், பேய் என நீண்ட தொலைவு பயணிக்கும் ஆன்மாவுக்கு ஓய்வு வேண்டாமா?
இறவாமை வேண்டும் என்றால் பிறவாமல் இருக்க வேண்டும். பிறப்பு இருந்தால் நிச்சயம் இறப்பு இருக்கும். இறப்பை அடையாமல் இருப்பதற்கு ஒரே வழி பிறக்காமல் இருப்பதுதான். புதுச்சேரி கம்பன் கழக விழாவில் எதை வேண்டுமானாலும் மாற்றுங்கள், ஆனால் சிந்தனை அரங்கை மாற்றாதீர்கள் என்றார் இலங்கை ஜெயராஜ்.
தொடர்ந்து, தூதும் வாதும்' என்ற தலைப்பில் முனைவர் ஞானசுந்தரமும், தோன்றலும் இறத்தலும்' என்ற தலைப்பில் பேராசிரியர் ராஜகோபாலனும் உரையாற்றினர். நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிறுவனர் ராமானுஜம் முன்னிலை வகித்தார்.
புதுவை முதல்வர் வே.நாராயணசாமி, சட்டப்பேரவைத் துணைத் தலைவர் வே.பொ.சிவக்கொழுந்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com