ஆதார் போல மாற்றுத் திறனாளிகளுக்கும் அடையாள அட்டை

ஆதார் அட்டை போல மாற்றுத் திறனாளிகளுக்காக தேசிய அளவிலான அடையாள அட்டை விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக மத்திய அரசின் மாற்றுத் திறனாளிகள் துறை முதன்மை ஆணையர் கமலேஷ்குமார்

ஆதார் அட்டை போல மாற்றுத் திறனாளிகளுக்காக தேசிய அளவிலான அடையாள அட்டை விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக மத்திய அரசின் மாற்றுத் திறனாளிகள் துறை முதன்மை ஆணையர் கமலேஷ்குமார் பாண்டே தெரிவித்தார்.
நாடு முழுவதும் மாநிலங்களில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நலத் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் தொடர்பாக மத்திய அரசின் மாற்றுத் திறனாளிகள் துறை முதன்மை ஆணையர் கமலேஷ்குமார் பாண்டே ஆய்வு நடத்தி வருகிறார். புதுச்சேரிக்கு வெள்ளிக்கிழமை வந்த அவர், தலைமைச் செயலகத்தில் மாற்றுத் திறனாளிகள் நல அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, நாடு முழுவதும் 2.6 கோடி மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். இவர்களில் 50 சதவீதம் பேருக்கு மாற்றுத் திறனாளிகள் தகுதிச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தகுதியுடைய மாற்றித் திறனாளிகளுக்கு விரைவில் சான்றிதழ்களை வழங்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுவை மாநிலத்தைப் பொருத்தவரை 30,900 மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். இவர்களில் 25,000 பேருக்கு தகுதிச் சான்றிதழ் வழங்கப்பட்டு, 20,952 பேருக்கு மாத உதவித் தொகையாக ரூ. 3 ஆயிரம் வழங்கப்படுகிறது. நாட்டிலேயே கோவா மாநிலத்தில்தான் அதிகப்பட்சமாக மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 3,500 உதவித் தொகை வழங்கப்படுகிறது.
மாற்றுத் திறனாளிகளுக்கு தனியாக துறை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. கர்நாடகம், தமிழகம், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஒடிசா, பிகார் உள்பட 15 மாநிலங்களில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை தனியாக அமைக்கப்பட்டுள்ளது. புதுவையில் சமூக நலத் துறையின் கீழ் இயங்குகிறது. 
இதைத் தனியாகப் பிரித்து செயல்படுத்த அறிவுறுத்தியுள்ளோம். 7 மாநிலங்களில் மட்டும்தான் மாற்றுத் திறனாளிகள் துறைக்கு முதன்மை ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளனர். புதுவை உள்பட பிற மாநிலங்களில் இந்தத் துறை கூடுதல் பொறுப்பாகவே வழங்கப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கு திறன் பயிற்சியளிக்கத் திட்டமிட்டு 2018}ஆம் ஆண்டுக்குள் 5 லட்சம் பேருக்கும், 2022}க்குள் 25 லட்சம் பேருக்கும் பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டை போல, மாற்றுத் திறனாளிகளுக்கும் தேசிய அளவிலான அடையாள அட்டையை (யுடிஐடி) வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 
சோதனை முயற்சியாக மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஒரு மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு இவ்வாறான அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
மாற்றுத் திறனாளிகளுக்கு தனியாக சிறப்புப் பள்ளிகளை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. சாதாரண பள்ளிகளில் மாற்றுத் திறனாளி மாணவர்களைச் சேர்க்க மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
அனைத்துப் பள்ளிகளிலும் ஒரு சிறப்பு ஆசிரியர் பணியை உருவாக்க வேண்டும். புதுவையை பொருத்தவரை, 440 பள்ளிகளிலும் சிறப்பு ஆசிரியர் பணியிடத்தை உருவாக்க வேண்டும் என்றார் அவர்.
முன்னதாக, மாற்றுத் திறனாளிகளுக்காக சேவை செய்யும் தொண்டு நிறுவன நிர்வாகிகள், மாற்றுத் திறனாளிகள் சங்க நிர்வாகிகளுடன் அவர் கலந்துரையாடினார்.
பேட்டியின் போது, மத்திய அரசின் துணைத் தலைமை ஆணையர் சஞ்சய்காந்த் பிரசாத், புதுவை சமூக நலத் துறைச் செயலர் சுந்தரவடிவேலு, இயக்குநர் கே.சாரங்கபாணி, துணை இயக்குநர் வி.சரோஜினி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com