புயல் சேதம் குறித்த அறிக்கை விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிப்பு: புதுவை அரசு அறிவிப்பு

புதுவையில் கஜா புயலால் ஏற்பட்ட சேதம் தொடர்பாக 2 அல்லது 3 தினங்களுக்குள் மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

புதுவையில் கஜா புயலால் ஏற்பட்ட சேதம் தொடர்பாக 2 அல்லது 3 தினங்களுக்குள் மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.
 இது தொடர்பாக புதுவை முதல்வர் அலுவலகம் வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 புதுவை முதல்வர் வே.நாராயணசாமி, சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், நலத் துறை அமைச்சர் மு.கந்தசாமி, வருவாய்த் துறை அமைச்சர் ஷாஜகான், வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் ஆகியோருடன் காரைக்கால் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.
 அப்போது, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, முதல்வர் நாராயணசாமி தொலைபேசியில் தொடர்புகொண்டு வீடுகள், கால்நடைகள், மின் கம்பங்கள், மீனவர்களின் படகுகள், மீன்பிடி வலைகள், விவசாயப் பயிர்கள், சாலைகள் உள்ளிட்ட சேத விவரங்களை விளக்கிக் கூறினார்.
 புயலின் பாதிப்பு மற்றும் சேத மதிப்பு குறித்த தற்காலிக அறிக்கை வெள்ளிக்கிழமை இரவுக்குள் மத்திய உள்துறைக்கு அனுப்பப்படும் என்றும், இன்னும் 2 அல்லது 3 தினங்களில் முழுமையான அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் முதல்வர் மத்திய அமைச்சரிடம் தெரிவித்தார்.
 புயல் சேதத்தை மதிப்பிட மத்திய குழு ஒன்றை புதுவைக்கு விரைந்து அனுப்பும் படியும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை முதல்வர் கேட்டுக்கொண்டார்.
 புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான உதவிகளை அரசு போர்க்கால அடிப்படையில் செய்யும் என்றும் முதல்வர் உறுதியளித்தார்.
 காரைக்கால் மாவட்டத்தில் வேரோடு பெயர்ந்த மற்றும் முறிந்து விழுந்த மரங்கள் அகற்றப்பட்டு சாலைகளில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டு விட்டன. மின் இணைப்பு உடனடியாகக் கொடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 காரைக்காலில் இயல்பு நிலை விரைவில் திரும்பிட அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்படி அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com