மானிய நிதியிலிருந்து அரசு நிறுவன ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வாய்ப்பு இல்லை: கிரண் பேடி திட்டவட்டம்

புதுவையில் மானிய நிதியில் இருந்து அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு போனஸ், ஊதியம் வழங்க வாய்ப்பு இல்லை என்று துணைநிலை ஆளுநர் கிரண் பேடி திட்டவட்டமாக அறிவித்தார்.

புதுவையில் மானிய நிதியில் இருந்து அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு போனஸ், ஊதியம் வழங்க வாய்ப்பு இல்லை என்று துணைநிலை ஆளுநர் கிரண் பேடி திட்டவட்டமாக அறிவித்தார்.
 புதுவை ஆளுநர் மாளிகையில் தேசிய பத்திரிகையாளர் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஆளுநர் கிரண் பேடி பேசியதாவது:
 ஊடகங்கள் தான் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஆட்சியாளர்கள் தவறான தகவல்களை கூறும்போது ஊடகங்கள் விழிப்புடன் செயல்பட்டு உண்மைத் தன்மையை விளக்க வேண்டும். புதுவையில் நிதிநிலை அறிக்கையில் அரசு சார்பு நிறுவனங்களுக்கு போதிய நிதி ஒதுக்கப்பட்ட பிறகும், 10,000 அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு போனஸ், ஊதியம் வழங்க ஆளுநர் கிரண் பேடி தடையாக இருந்து வருகிறார் என்று முதல்வர் நாராயணசாமி குற்றஞ்சாட்டி வருகிறார்.
 இதில் இருக்கும் உண்மையை ஊடகங்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட நிதியாக இருந்தாலும், அது பொதுக்களின் பணம்தான். ஏதாவது ஒரு வகையில் மக்கள் கட்டும் வரிதான் அரசு நிதியாக மாறுகிறது.
 இதை செலவு செய்ய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அரசு நிதியை குறிப்பிட்ட திட்டங்களுக்கு ஒதுக்க முதல்வரை பொருத்தவரை ரூ.10 கோடி வரை அதிகாரம் உண்டு. துணைநிலை ஆளுநருக்கு ரூ.50 கோடி வரை அதிகாரம் உண்டு. அதற்கு மேல் மத்திய உள்துறையிடம்தான் அனுமதி பெற வேண்டும். முதல்வருக்கு அதிகாரம் இருந்தாலும், அந்த நிதி சரியான முறையில் செலவு செய்யப்படுகிறதா என்பதை ஒழுங்குப்படுத்தும் அதிகாரம் துணைநிலை ஆளுநருக்கு உண்டு.
 துணைநிலை ஆளுநரை பொருத்தவரை அரசு நிதி, அரசு மானியம் ஆகிய இரண்டு வகையில் நிதியை கையாள அதிகாரம் உள்ளது.
 அரசு நிதியை பொருத்தவரை அதை தேவைப்படும் திட்டங்களுக்கு மடைமாற்றம் செய்ய துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் உண்டு.
 அதே நேரத்தில், மத்திய பொதுநிதி சட்டம் 2017 விதி 230-ன்படி அரசு மானிய நிதியை மடைமாற்றம் செய்ய துணை நிலை ஆளுநருக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது.
 புதுவை அரசு நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு மானிய நிதியை போனஸ், ஊதியத்துக்கு வழங்க விதியில் இடம் இல்லை. எனவே, இந்த நிதியை போனஸ், ஊதியத்துக்கு வழங்க வாய்ப்பு இல்லை.
 அவ்வாறு வழங்கினால் எதிர்காலத்தில் மத்திய தலைமை கணக்கு தணிக்கையாளரின் தணிக்கையின்போது துணை நிலை ஆளுநர் மீது குற்றச்சாட்டு எழுப்பப்படும். எனவே, இதில் இருக்கும் உண்மைத் தன்மையை பொதுமக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றார் ஆளுநர் கிரண் பேடி.
 நிகழ்ச்சியில், ஆளுநரின் செயலர் ஸ்ரீதர் உள்பட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com