இந்தியா விரைவில் 3-ஆவது பெரிய பொருளாதார நாடாக மாறும்

இந்தியா விரைவில் 3-ஆவது பெரிய பொருளாதார நாடாக மாறும் என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

இந்தியா விரைவில் 3-ஆவது பெரிய பொருளாதார நாடாக மாறும் என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

புதுச்சேரி ஜிப்மரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 9-ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட அவர், 466 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசியதாவது:

மதம், மொழி, கலாசாரம் என வேறுபட்டாலும் நாம் அனைவரும் இந்தியர். அந்த எண்ணத்துடன் இளைஞர்கள் செயல்பட வேண்டும்.

தாய் மொழி,  தாய் நாடு,  ஆசிரியர் ஆகியோரை என்றும் மறக்கக் கூடாது. வீடுகளில் தாய்மொழியில் உரையாட வேண்டும்.  தாய் மொழி நம் கண்ணாகவும்,  பிற மொழிகள் அதன் மேல் அணியும் கண்ணாடியாகவும் இருக்க வேண்டும்.

மக்கள்தொகை அதிகமுள்ள இந்தியாவில் சுகாதாரம் தொடர்பான சேவைகள் அதிகம் தேவைப்படுகின்றன. ஜிப்மர், எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்குச் செல்லும்போது, இன்னும் அதிக மருத்துவச் சேவைகள் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். நாட்டு மக்களுக்கு தரமான மருத்துவச் சேவை கிடைக்காததுடன், குறைந்த செலவில் உயர் சிகிச்சையும் கிடைக்கவில்லை. அனைவருக்கும் தரமான மருத்துவச் சேவை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

பிரதமர் ஜன் ஆரோக்யா திட்டத்தை நல்ல முறையில் செயல்படுத்தினால் நாட்டில் மருத்துவச் சேவையில் பெரும் புரட்சி ஏற்படும். பல்வேறு துறைகளில் நாடு முன்னேறியுள்ளது. இதே உத்வேகத்துடன் சென்றால் விரைவில் 3-ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும்.
பிரதமர் நரேந்திர மோடியின் மூன்று மந்திரங்களான சீர்த்திருத்தம், செயல்பாடு, மாற்றம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இளைஞர்கள் செயல்படுவது அவசியம்.

சமூகத்தைக் காக்கும் பொறுப்பு மருத்துவர்களுக்கு உள்ளது. சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை புன்னகையுடன் அணுக வேண்டும். ஆய்வக முடிவுகளைக் கொண்டு மட்டும் அவர்களை அணுகாமல், மனித நேயத்துடன் அணுக வேண்டும் என்றார் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு.
மத்திய சுகாதாரம் - குடும்ப நல அமைச்சர் கே.பி.நட்டா கெளரவ விருந்தினராகப் பங்கேற்றுப் பேசியதாவது:

நாடு முழுவதும் 13 எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகள் விரைவில் தொடங்கப்படும். 70 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அதி சிறப்பு வாய்ந்த

மருத்துவமனைகளாக மாற்றப்படும். 3 மக்களவைத்  தொகுதிகளுக்கு ஒன்று என்ற விகிதத்தில் புதிதாக 24 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும். 20 புற்றுநோய் ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்படும் என்றார் அவர்.

விழாவில் புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி,  முதல்வர் வே.நாராயணசாமி,  ஜிப்மர் மருத்துவமனைத் தலைவர் மஹாராஜ் கிஷன் பான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com