புதுவையில் ஜல்லிக்கட்டு நடத்த குடியரசுத் தலைவர் ஒப்புதல்: முதல்வர் தகவல்

புதுவையில் ஜல்லிக்கட்டு நடத்த குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதாக முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.

புதுவையில் ஜல்லிக்கட்டு நடத்த குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதாக முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.
புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் அவர் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுவை சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு நடத்த தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பினோம். மேலும், புதுவையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரியிருந்தோம். இந்தக் கோப்புக்கு குடியரசுத்தலைவர் தற்போது ஒப்புதல் அளித்துள்ளார்.  இதன் மூலம் இந்த உத்தரவு நடைமுறைக்கு வந்துள்ளது. விதிமுறைகளுக்கு உள்பட்டு புதுவையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்படும். பொங்கலுக்கு மிகப்பெரிய அளவில் ஜல்லிக்கட்டு நடத்தலாம். இளைஞர்கள் பெரும்பான்மையாக பங்கேற்கலாம். 
மத்திய அரசும்,  எண்ணெய் நிறுவனங்களும் பெட்ரோல், டீசல் விலையில் ரூ.2.50-ஐ குறைத்தாலும் தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது. இதற்கு மத்திய அரசு கலால் வரியை அதிகமாக விதிப்பதே காரணம். பெட்ரோல் விலை புதுச்சேரியில் குறைவாக இருப்பதற்கு காரணம் "வாட் வரி' குறைவாக இருப்பதுதான். சமையல் எரிவாயுக்கு கொடுத்த மானியத்தை மத்திய அரசு ரத்து செய்ததால் அதன் விலையும் உயர்ந்திருக்கிறது.
நாட்டின் பண மதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது ஒரு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.75-க்கும் அதிகமாகி, வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. மத்திய அரசு தொடர்ந்து பொருளாதாரச் சீர்கேட்டில் இறங்கி இருப்பதால் இந்தப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. வங்கிகளில் வாராக் கடன்கள் ரூ.11 லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது. வங்கிகள் அந்தக் கடனை வசூல் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ரஃபேல் விமான பேர ஊழலால் நாட்டுக்கு ரூ.41 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் புகார் தொடர்பாக எந்தவித பதிலும் கூறாமல் பிரதமர் மெளனம் காத்து வருகிறார். இந்த ஊழல் சம்பந்தமாக நாடாளுமன்ற நிலைக்குழு விசாரிக்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை வைத்தது.  இதனை நாடாளுமன்ற நிலைக்குழு ஏற்கவில்லை.  இந்தப் பிரச்னை வருகிற மக்களவைத் தேர்தலில் பூதாகரமாக உருவெடுக்கும் என்றார் நாராயணசாமி.
பேட்டியின்போது, முதல்வரின் நாடாளுமன்றச் செயலர் க.லட்சுமி நாராயணன்,  புதுவை அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார்,  தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ.  ஆகியோர் உடன் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com