புதுச்சேரியில் கடைகள் அடைப்பு; பேருந்துகள் இயங்கவில்லை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்தையொட்டி, புதுச்சேரியில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்தையொட்டி, புதுச்சேரியில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
 காங்கிரஸ் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்ட இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு திமுக, பாமக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, மனிதநேய மக்கள் கட்சி, மாணவர் கூட்டமைப்பு மற்றும் தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. அதிமுக ஆதரவு தெரிவிக்கவில்லை.
 புதுவையில் பிரதான சாலைகளில் உள்ள கடைகள் மட்டுமன்றி, தெருக்களில் உள்ள கடைகளும் திறக்கப்படவில்லை. இதனால், அனைத்துப் பகுதிகளிலும் கடைவீதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
 தனியார் பேருந்துகள், லாரிகள், வேன்கள், டெம்போக்கள் இயங்கவில்லை. சில ஆட்டோக்கள் மட்டும் இயங்கின. அரசுப் பேருந்துகள் காலை 8 மணி வரை போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. கல்வீசி தாக்கியதை அடுத்து அவைகளும் நிறுத்தப்பட்டன.
 தனியார் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டிருந்தன. அரசுப் பள்ளிகளில் திங்கள்கிழமை காலாண்டு தேர்வு தொடங்கி நடைபெற்றது. அரசுக் கல்லூரிகள் வழக்கம்போல இயங்கின. பெரும்பான்மையான தனியார் தொழிற்சாலைகள், அலுவலகங்கள் இயங்கவில்லை.
 புதுச்சேரியில் உள்ள தமிழக அரசு பணிமனையில் இருந்து அந்த மாநில பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் கம்பன் கலையரங்கம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, அந்தப் பேருந்துகளும் நிறுத்தப்பட்டன.
 அதேநேரத்தில், கடலூரில் இருந்து புதுச்சேரி வழியாக சென்னை செல்லக்கூடிய தமிழக அரசுப் பேருந்துகள் விழுப்புரம் வழியாக இயக்கப்பட்டன.
 திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரி வந்த தமிழக அரசு மற்றும் தனியார் பேருந்துகள் கோரிமேடு எல்லையிலேயே நிறுத்தப்பட்டன.
 அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க, புதுச்சேரியின் முக்கிய இடங்களில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். பேருந்துகள் இயங்காததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
 திரையங்குகளில் பகல், பிற்பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. பெட்ரோல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. அரசு அலுவலகங்கள் வழக்கம்போல இயங்கின.
 பிஎஸ்என்எல் போன்ற மத்திய அரசின் அலுவலகங்களின் முன்பக்கக் கதவு பூட்டப்பட்டு, பக்கக் கதவுகள் வழியாக வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், மக்கள் கூட்டம் அதிகம் இல்லை. இந்த முழுஅடைப்பு போராட்டம் காரணமாக
 புதுச்சேரியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com